பெரம்பலூரில் முககவசம் அணியாமலும், சமூக இடைவெளியை பின்பற்றாமலும் சென்ற 142 பேருக்கு அதிகாரிகள் அபராதம் விதித்துள்ளனர்.
தமிழகம் முழுவதும் மீண்டும் கொரோனா வேகமெடுத்து பரவி வருகிறது. இதனை கட்டுப்படுத்த அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. ஆனால் அதனை சிறிதும் பொருட்படுத்தாமல் மக்கள் பாதுகாப்பு விதிமுறைகளை மீறி நடப்பதால் அதிகாரிகள் அபராதம் விதித்து வருகின்றனர். அந்த வகையில் பெரம்பலூர் மாவட்டத்தில் பொது இடங்களில் சமூக இடைவெளியை கடைபிடிக்காமல் செல்பவர்களுக்கு ரூ. 500-ம், முககவசம் அணியாமல் செல்பவர்களுக்கு ரூ. 200-ம் அபராதம் விதிக்கப்படும்.
மேலும் தொழிற்சாலைகள், வணிக நிறுவனங்கள், திருமண மண்டபங்கள் ஆகிய இடங்களில் முககவசம் அணியாமல் சென்றால் அந்தந்த நிறுவனங்களுக்கும், திருமண மண்டபங்களுக்கும் அபராதம் ரூ. 5000 விதிக்கப்படும் என்று மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது. அதன்படி பெரம்பலூர் மாவட்டத்தில் வருவாய் துறையினர் மற்றும் சுகாதாரத்துறையினர் முககவசம் அணியாமல் சென்றவர்களிடம் அபராதமாக ரூ. 200 வீதம் 139 பேரிடம் ரூ.27 ஆயிரத்து 800 கடந்த 15-ஆம் தேதி முதல் நேற்று முன்தினம் வரை வசூலித்துள்ளனர். மேலும் சமூக இடைவெளியை கடைபிடிக்காமல் சென்றவர்களிடம் ரூ. 500 வீதம் மூன்று நபர்களிடம் 500 ரூபாயும் மொத்தம் ரூ.29 ஆயிரத்து 300 அபராதமாக வசூலிக்கப்பட்டுள்ளது.