சிவகங்கை காரைக்குடி அருகே சங்கராபுரம் ஊராட்சி சார்பில் கொரோனா விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.
தமிழகம் முழுவதும் கொரோனாவின் தாக்கம் மீண்டும் அதிகரித்து வருகிறது. இதனால் தமிழக அரசு கட்டுப்பாடுகளுடன் கூடிய நடவடிக்கையை மேற்கொண்டு வருகிறது. அந்த வகையில் சிவகங்கை மாவட்டத்தில் உள்ள காரைக்குடி பர்மா காலனி பேருந்து நிலையத்தின் அருகில் கொரோனா விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்தப்பட்டது. கொரோனா தொற்று பரவாமல் தடுக்க சங்கராபுரம் ஊராட்சி சார்பில் மாவட்ட நிர்வாகத்தின் உத்தரவின்பேரில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பொதுமக்களிடம் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்தப்பட்டது.
இந்த நிகழ்ச்சியில் பொது இடங்களில் எச்சில் துப்புவது தவிர்க்க வேண்டும், முககவசம் கட்டாயம் அணிந்து செல்ல வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டது. இந்த நிகழ்ச்சிக்கு ஊராட்சிகளின் உதவி இயக்குனர் சண்முகம் தலைமை தாங்கியுள்ளார். மேலும் பொது இடங்களில் எச்சில் துப்புபவர்களுக்கு ரூ.500-ம், முககவசம் அணியாமல் செல்பவர்களுக்கு ரூ.200-ம் அபராதமாக வசூலிக்கப்படும் என்று ஊராட்சி சார்பில் எச்சரிக்கை விடப்பட்டது.