கேரளாவில் மீண்டும் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதால் 11 மாவட்டங்களுக்கு மஞ்சள் எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.
அரபிக் கடலில் உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக கடந்த 15 மற்றும் 16 ஆம் தேதிகளில் கேரளாவில் கனமழை பெய்தது. இதனால் இடுக்கி மற்றும் கோட்டயம் உள்ளிட்ட மாநிலங்கள் வெள்ளக்காடாக மாறியது. பல அணைகளின் நீர்மட்டம் உயர்ந்துள்ளது. மேலும் இடுக்கி, கோட்டயம் மாவட்டங்களில் மலைப்பகுதியில் நிலச்சரிவு ஏற்பட்டதால் 50க்கும் மேற்பட்டோர் பலியாகினர். அங்கு தேசிய பேரிடர் மீட்பு குழுவினர் மீட்பு பணியில் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில் கேரளாவில் தொடர்ந்து மழை பெய்து வருவதால் 11 மாவட்டங்களுக்கு மஞ்சள் எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. இது தொடர்பாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளதாவது: வடகிழக்கு பருவமழை தொடங்க உள்ளதால் அடுத்த 24 மணி நேரத்தில் பலத்த மழை பெய்ய வாய்ப்பு உள்ளது. இதனால் திருவனந்தபுரம், கொல்லம், பத்தனம்திட்டா, கோட்டயம், இடுக்கி, எர்ணாகுளம் உள்ளிட்ட 11 மாவட்டங்களுக்கு இன்றும் நாளையும் மஞ்சள் நிற எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.