கர்நாடகா சித்ரதுர்கா முருகமடத்தின் விடுதியில் 2 சிறுமிகள் பயின்று வருகின்றனர். இச்சிறுமிகளை பாலியல் கொடுமை செய்ததாக மடாதிபதி சிவ மூர்த்தி முருகஸ்ரீ மீது குற்றம்சாட்டப்பட்ட சம்பவமானது நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியதை அடுத்து, அவர் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. அதன்பின் போலீசில் சரணடைந்த சிவ மூர்த்தி முருகஸ்ரீ செப்டம்பர் 1 முதல் காவலில் வைக்கப்பட்டு இருக்கிறார்.
இதனிடையில் முருகஸ்ரீ மீதான பாலியல் குற்றச்சாட்டுகள் அதிகரித்துவரும் நிலையில், இப்போது மடத்தில் சமையல் பணியாளராக இருந்த பெண் ஒருவர் புதியதாக புகாரளித்துள்ளார். அதாவது, அந்த பெண் தன் மகள்களில் ஒருவரை காவல் நிலையத்துக்கு நேற்று அழைத்துச்சென்றார். இதையடுத்து தன் 2 மகள்கள் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டதாக அப்பெண் புகாரளித்தார். இது தவிர்த்து மேலும் 2 சிறுமிகள் உட்பட மொத்தம் 4 சிறுமிகள் பாலியல் வன்கொடுமைக்கு ஆளானதாக புகாரில் கூறப்பட்டுள்ளது.
அதனை தொடர்ந்து பாலியல் துன்புறுத்தல் குற்றச்சாட்டில் சிறையில் இருக்கும் சிவமூர்த்தி முருகஸ்ரீ மீது மைசூர் நசராபாத் போலீஸ் நிலையத்தில் நள்ளிரவில் புகார் பதிவுசெய்யப்பட்டுள்ளது. மேலும் கூடுதலாக முருக மடத்தில் பணியாற்றும் ஊழியரின் குழந்தைகளை பாலியல் ரீதியாக துன்புறுத்திய வழக்கில் முருக மடத்தின் சீடர்கள் உள்பட 7 பேர் மீதும் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. அதன்படி விடுதி வார்டன், சீடர்கள் உல்பட 4 பேர் கைது செய்யப்பட்டு சிறைச்சாலையில் அடைக்கப்பட்டனர். அத்துடன் மற்றவர்களைத் தேடும் பணியானது தீவிரமாக நடைபெறுகிறது என காவல்துறையினர் தெரிவித்தனர்.