இந்தியாவில் வீட்டு உபயோகத்திற்கான சமையல் எரிவாயு சிலிண்டருக்கு அரசு தரப்பிலிருந்து வாடிக்கையாளர்களுக்கு மானியம் வழங்கப்படுகின்றது. இது நேரடியாகவே பயனாளிகளின் வங்கிக் கணக்கில் செலுத்தப்படுகிறது. முதலில் சிலிண்டர் வாங்கும்போது சிலிண்டருக்கான முழு விலையையும் கொடுத்து வாங்க வேண்டும். அதன் பின்னர் அதற்கான மானியத் தொகை வாடிக்கையாளர் வங்கிக் கணக்கில் அரசு தரப்பிலிருந்து செலுத்தப்படும்.
ஆனால் ஒரு சிலருக்கு மானிய உதவி வங்கிக் கணக்குக்கு வருகிறதா இல்லையா என்பது தெரிவதில்லை. சமையல் சிலிண்டருக்கான மானியத்தை மத்திய அரசு நிறுத்தி விட்டதா என்ற சந்தேகமும் பலருக்கு உள்ளது. ஏனென்றால் சென்ற ஆண்டின் மே மாதம் முதலே பலருக்கு சிலிண்டர் மானியம் கிடைக்கவில்லை. சிலிண்டருக்கான மானிய உதவியைப் படிப்படியாக நிறுத்தும் நடவடிக்கையில் மத்திய அரசு ஈடுபட்டுள்ளதாகத் தகவல் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
ஆனால் சிலிண்டர் மானியத்தை நிறுத்துவது தொடர்பான எந்த ஒரு அறிவிப்பும் அரசிடமிருந்தும் வெளியாகவில்லை. மானிய உதவியும் வந்துசேரவில்லை. அதனால் பயனாளிகளிடையே குழப்பம் இருந்தது. இந்நிலையில் சிலிண்டருக்கான மானிய உதவியை மத்திய அரசு மீண்டும் வழங்கத் தொடங்கியுள்ளது. தற்போதைய நிலையில் சமையல் சிலிண்டருக்கு ரூ.79.26 மானியம் கிடைக்கிறது. சிலருக்கு ரூ.158.52, சிலருக்கு ரூ.237.78 வழங்கப்படுகிறது. இது மாநிலத்திற்கு மாநிலம் மாறுபடும்.
சிலிண்டர் மானியம் ரத்து செய்யப்பட்டுவிட்டது என்ற செய்தி பரவிக் கொண்டிருந்த நிலையில், தற்போது சிலிண்டர் மானியம் மீண்டும் வழங்கப்படுகிறது என்ற செய்தி பொதுமக்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதனால் அனைவரும் தங்களது வங்கிக் கணக்கில் மானியத் தொகை வந்துவிட்டதாக என்று சரிபார்க்கத் தொடங்கியுள்ளனர்.