Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

மீண்டும் வால்பாறைக்கு இடம்பெயரும் காட்டு யானைகள்…. வனத்துறையினர் முக்கிய அறிவுறுத்தல்….!!!!!

கோவை மாவட்டம் வால்பாறை பகுதியில் சென்ற வருடம் மார்ச்மாதம் இறுதியில் வறட்சி துவங்கியது. இதன் காரணமாக வால்பாறை வனப் பகுதியிலிருந்த காட்டு யானைகள் கூட்டம் கேரள வனப்பகுதிக்கு சென்றுவிட்டது. இப்போது தென் மேற்கு பருவமழை பெய்து வால்பாறை பகுதி முழுதும் பசுமையாக காட்சியளிக்கிறது. இதையடுத்து கேரள வனப் பகுதிகளிலிருந்து காட்டு யானைகள் மீண்டுமாக வால்பாறை வனப் பகுதிகளுக்கு இடம்பெயர்ந்து வர தொடங்கி இருக்கிறது.

தமிழக, கேரள எல்லையிலுள்ள வால்பாறை வனப் பகுதி, சாலக்குடி வனப் பகுதியில் காட்டு யானைகள் வாழ்ந்து வருகிறது. இவை கால சூழ்நிலைகளுக்கு ஏற்றவாறு உணவு, தண்ணீர், இனப்பெருக்கம் போன்ற காரணங்களுக்காக இடம்பெயர்ந்து செல்வது வழக்கம் ஆகும். அந்த அடிப்படையில் வால்பாறை மற்றும் கேரள வனப்பகுதிக்கு யானைகள் சென்று வருகிறது. தமிழக, கேரள வனப் பகுதிகளை ஒட்டியுள்ள எஸ்டேட் பகுதிகளான நல்லமுடி, பன்னிமேடு, அக்காமலை, முருகன் எஸ்டேட், குரங்கு முடி போன்ற பகுதிகளில் காட்டுயானைகள் நடமாட்டம் அதிகரித்துள்ளது.

நேற்று வால்பாறை அருகேயுள்ள குரங்குமுடி எஸ்டேட் வனப்பகுதி வழியே வந்த யானைகள் குரங்குமுடி எஸ்டேட் வழியாக கெஜமுடி எஸ்டேட் வனப்பகுதிக்கு சென்றது. அதன்பின் மானாம்பள்ளி வனச்சரக வனத்துறையினர் குரங்குமுடி, முருகன் எஸ்டேட், கெஜமுடி போன்ற பகுதிகளில் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். எஸ்டேட் பகுதி மக்கள் இரவு வேளையில் கவனமாக இருக்க வேண்டும். மேலும் காட்டு யானைகள் நடமாட்டம் குடியிருப்பு பகுதிக்கு வருவதை பார்த்தால் உடனே வனத்துறையினருக்கு தகவல் தெரிவிக்க வேண்டும் என வனத்துறையினர் அறிவுறுத்தியுள்ளனர்.

Categories

Tech |