சிவகங்கை சங்கராபுரம் பகுதியில் ஊராட்சி சார்பில் கொரோனா பரவலை கட்டுப்படுத்துவது குறித்து விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.
தமிழகத்தில் மீண்டும் கொரோனா வேகமெடுத்து பரவி வருகிறது. இதனால் சிவகங்கை மாவட்டத்தில் உள்ள சங்கராபுரம் ஊராட்சி சார்பில் மாவட்ட நிர்வாகம் உத்தரவின் பேரில் கொரோனாவை கட்டுப்படுத்த முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது. அந்த விழிப்புணர்வில் பொதுமக்களிடம் கொரோனா பரவாமல் தடுப்பதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக துண்டுபிரசுரம் வினியோகிக்கப்பட்டது. இதற்கு ஊராட்சிகளின் உதவி இயக்குனர் சணமுகம் தலைமை தாங்கியுள்ளார். இதில் பொது இடங்களில் எச்சில் துப்புவதை தவிர்க்க வேண்டும். பொதுமக்கள் கட்டாயம் முககவசம் அணிந்து கொள்ள வேண்டும் என்று காரைக்குடி பர்மா காலனி பேருந்து நிலையத்தின் அருகே அறிவுறுத்தப்பட்டது.
மேலும் பொது இடங்களில் எச்சில் துப்புபவர்களிடம் ரூ. 500-ம், முககவசம் அணியாமல் செல்பவர்களிடம் ரூ.200-ம் அபராதமாக வசூலிக்கப்படும் என்று ஊராட்சி சார்பில் எச்சரிக்கை விடுக்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் ஊராட்சி துணை தலைவர் பிரதீப், ஊராட்சி மன்ற தலைவர் பாண்டியராஜன், வட்டார வளர்ச்சி அலுவலர் ஜோசப் அருள்ராஜ், மண்டல துணை வட்டார வளர்ச்சி அலுவலர், சுகாதார ஆய்வாளர்கள், துணை வட்டார வளர்ச்சி அலுவலர்கள் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டுள்ளனர். இந்த நிகழ்ச்சியின் முடிவில் ஊராட்சி செயலாளர் அண்ணாமலை நன்றி கூறியுள்ளார்.