உலகின் முதல் கொரோனா வைரஸ் தொற்று சீனாவின் உகான் நகரில் ஏற்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது. அங்கிருந்து உலகம் முழுவதும் பரவி வரலாறு காணாத தாக்கத்தை கொரோனா தொற்று நோய் ஏற்படுத்தியுள்ளது. கொரோனா தடுப்பூசி உள்ளிட்ட பல்வேறு தடுப்பு நடவடிக்கை காரணமாக உலக நாடுகள் தற்போது படிப்படியாக கொரோனா தொற்றிலிருந்து மீண்டு கொண்டிருக்கிறது. இந்த சூழலில் சீனாவில் கடந்த சில மாதங்களாக கொரோனா பாதிப்பு எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டிருக்கிறது. நேற்று முன்தினம் 393 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்ட நிலையில் கடந்த 24 மணி நேரத்தில் அந்த எண்ணிக்கை அதிகரித்துள்ளது.
அதன்படி கடந்த 24 மணி நேரத்தில் சீனாவின் உள்ளூர் நகரங்களில் 498 பேருக்கு கொரோனா தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டிருக்கிறது. இதில் 391 பேருக்கு அறிகுறி இல்லாத கொரோனா தொற்று உறுதியாகி இருப்பதாக கூறப்பட்டுள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் அங்கு கொரோனாவில் புதிதாக உயிரிழப்புகள் எதுவும் ஏற்படவில்லை. இந்தநிலையில் சீனாவில் இதுவரை கொரோனாவால் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 526 ஆக உள்ளது. மேலும் சீனாவில் இதுவரை உறுதி செய்யப்பட்ட கொரோனா பாதிப்புகளின் எண்ணிக்கை இரண்டு லட்சத்து 29 ஆயிரத்து 701 ஆக உயர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கதாகும்.