கடலில் தவறி விழுந்து மாயமான மீனவர் இரண்டு நாட்களுக்கு பிறகும் கிடைக்காததால் குடும்பத்தினர் வருத்தத்தில் உள்ளனர்.
கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள நித்திரவிளை கிராமத்தில் வசிக்கும் பிரான்சிஸ் என்பவருக்கு சொந்தமான விசைப்படகில் 7 மீனவர்கள் கடந்த 17-ஆம் தேதி தேங்காப்பட்டணம் மீன்பிடி துறைமுகத்திலிருந்து ஆழ்கடலுக்கு மீன் பிடிப்பதற்காக சென்றுள்ளனர். இவர்கள் சுமார் 40 நாட்டிக்கல் தொலைவில் இலங்கை கடல் பகுதியில் மீன்பிடித்து கொண்டிருந்த போது ஜெபமணி என்பவர் எதிர்பாராதவிதமாக கடலில் தவறி விழுந்துவிட்டார்.
இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த சக மீனவர்கள் கடலுக்குள் குதித்து ஜெபமணியை நீண்ட நேரமாக தேடியும் அவர்களால் கண்டுபிடிக்க இயலவில்லை. இதனால் உடனடியாக கரை திரும்பிய மீனவர்கள் இது குறித்து மீன்வளத்துறை அதிகாரிகள் மற்றும் குமரி மாவட்ட மீனவ சங்கங்களுக்கு தகவல் தெரிவித்துள்ளனர். இரண்டு நாட்கள் தேடிய பிறகும் ஜெபமணி கிடைக்காததால் அவருக்கு என்ன ஆனது என்று தெரியாமல் குடும்பத்தினர் மிகவும் வருத்தத்தில் உள்ளனர்.