மீன்பிடித் தொழிலாளர்களுக்கு உதவும் வகையில் செவுள் வலை படகுகள் கட்டுவதற்கு 50% மானிய தொகை பெற விண்ணப்பிக்கலாம் என்று சென்னை மாவட்ட ஆட்சியர் விஜயராணி தெரிவித்துள்ளார். இதுபற்றி அவர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது, சமீப காலத்தில் கடல் பகுதியில் அதிகரித்து வரும் மீன் பிடி அழுத்தத்தை குறைப்பதாகவும், ஆழ்கடல் பகுதியில் உள்ள மீன் வள ஆதாரங்களை முறையாக பயன்படுத்தவும், தூண்டில் மூலம் சூரை மீன் பிடிப்பு மற்றும் செவுள் வலை பயன்படுத்தும் புதிய மீன்பிடி படகை கட்டும் மீனவர்களுக்கான ஒரு புதிய திட்டத்தை அறிவித்து தமிழக அரசு செயல்படுத்தி வருகிறது.
இந்தத் திட்டத்தின் கீழ் தூண்டில் மூலம் சூரை மீன் பிடிப்பு மற்றும் செவுள் வலை பயன்படுத்தும், புதிய மீன்பிடி விசைப் பலகை கட்டுவதற்கு ஒரு படகிற்கு ஆகும் செலவில் 50 சதவிகிதம் அதிகபட்சமாக 30 லட்சம் ரூபாய் வரை மீனவர்களுக்கு மானியமாக வழங்கப்படும். தமிழகத்தை சேர்ந்த முழுநேர மீன்பிடித் தொழிலில் ஈடுபடும் மீனவர்கள், அதிகபட்சம் 6 பேர் கொண்ட குழுவாக அல்லது மீனவர் கூட்டுறவு சங்கங்கள் அல்லது தனி நபராகவோ இந்தத் திட்டத்தின் கீழ் பயன் பெற்றுக் கொள்ளலாம். விண்ணப்பிக்க நினைப்பவர் விண்ணப்ப படிவங்களை மீன்வளத் துறையின் இணையதளத்தில் இருந்து கட்டணமில்லாமல் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
விண்ணப்ப படிவங்களை மாவட்ட மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை உதவி இயக்குனர் மீன்பிடித் துறைமுக வேளாண்மை பிரிவு அலுவலகத்தில் அலுவலக நாட்களில் நேரில் சென்று விலையில்லாமல் பெற்று கொள்ளலாம். மேலும் விண்ணப்பதாரர் மீன்வளத் துறை இணையதளத்தில் உள்ள விரிவான வழிகாட்டு நெறிமுறைகளின்படி பூர்த்தி செய்த விண்ணப்பங்களை மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை ஆணையர், கால்நடை பராமரிப்பு மற்றும் மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை ஒருங்கிணைந்த கட்டடங்கள், மூன்றாவது தளம், கால்நடை மருத்துவமனை வளாகம், 571 அண்ணா சாலை, நந்தனம் சென்னை -35 என்ற முகவரிக்கு பதிவு அஞ்சல் மூலமாகவோ அல்லது நேரடியாகவோ பிப்ரவரி 14 -ஆம் தேதிக்குள் சமர்ப்பிக்க வேண்டும் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.