தமிழகத்தின் பக்கத்து மாநிலமான கேரளா மாநிலத்தில் தென்மேற்கு பருவமழை அக்டோபர் மாதமே முடிவடையும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் நவம்பர் மாதம் வரை கன மழை கொட்டி தீர்த்தது. இதனால் மாநிலத்தின் பல மாவட்டங்களிலும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு மக்கள் இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டது.
இந்த நிலையில் செய்தியாளர்களை சந்தித்து பேசிய கேரள முதல்வர் பினராயி விஜயன், அக்டோபர் மற்றும் நவம்பர் மாதங்களில் பெரும்பாலான நாட்கள் கனமழை பெய்ததால் மீனவர்கள் மீன்பிடிக்க செல்ல முடியவில்லை. எனவே மாநிலத்தில் உள்ள 1,51,452 மீனவர்களுக்கு தலா 3,000 ரூபாய் நிவாரணம் வழங்கப்படும். இந்த நிவாரணம் முதலமைச்சர் பேரிடர் நிவாரண நிதியிலிருந்து வழங்கப்படும் என்று தெரிவித்துள்ளார்.