ஈரான் நாட்டிலிருந்து கடந்த மார்ச் 22ஆம் தேதி அந்நாட்டில் பதிவு செய்யப்பட்ட படகில் மீன்பிடிக்க கடலுக்குச் சென்ற கன்னியாகுமரி மாவட்டத்தைச் சேர்ந்த 20 மீனவர்கள் மற்றும் கேரள மாநிலத்தை சேர்ந்த நான்கு மீனவர்கள் என 24 இந்திய மீனவர்கள், கடந்த மார்ச் 25ஆம் தேதியன்று கத்தார் நாட்டு கடற்பகுதியில் கைது செய்யப்பட்டுள்ளனர். சிறையில் அடைக்கப்படுவதற்கு முன்பாக கத்தாரில் உள்ள காவல் நிலையத்தில் அவர்கள் விசாரிக்கப்பட்டுள்ளனர். அவர்களது நிலை என்னவானது என்று அறியாமல் கவலை அடைந்துள்ள அவர்களது குடும்பத்தினர் அரசு உடனடியாக தலையிட வேண்டும் என்று கோரிக்கை விடுத்திருந்தனர்.
இதனையடுத்து மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் அவர்கள், மீனவர்கள் சிறை பிடிக்கப்பட்ட விவரத்தைக் குறிப்பிட்டு கத்தாரில் உள்ள இந்திய தூதரகத்தின் வாயிலாக அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொண்டு, சிறையில் உள்ள இந்திய மீனவர்களை விடுதலை செய்து, தாயகத்திற்கு அனுப்பி விட வேண்டும் என மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் திரு.எஸ்.ஜெய்சங்கர் அவர்களுக்கு கடிதம் எழுதியுள்ளார். அதில் 20 கன்னியாகுமரி மாவட்ட மீனவர்கள் உள்ளிட்ட 24 இந்திய மீனவர்களை உடனடியாக மீட்பதற்கான நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் எனவும் குறிப்பிட்டுள்ளார்.