யாழ்ப்பாணம் சிறையில் இருக்கும் தமிழக மீனவர்களை விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கருக்கு முதல்வர் முக ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.
யாழ்ப்பாணம் சிறையில் உள்ள மீனவர்களை விடுதலை செய்வதற்கு முயற்சிகள் எடுக்க வேண்டும் என்று மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கருக்கு முதல்வர் முக ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார். அந்த கடிதத்தில் அவர் தெரிவித்துள்ளதாவது: “கடந்த மார்ச் 31ஆம் தேதி இந்திய பிரதமரை தான் சந்தித்த போது இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடியை கருத்தில் கொண்டு இலங்கை தமிழர்களுக்கு உதவுவதற்கு தேவையான அத்தியாவசிய பொருட்களை மற்றும் உயிர் காக்கும் மருந்துகளை தமிழ்நாடு அரசு வழங்க தயாராக உள்ளது என்று தெரிவித்ததை சுட்டிக்காட்டினார்.
மேலும் கடந்த ஏப்ரல் 7 ஆம் தேதி வெளியுறவுத் துறை அமைச்சருடன் தமது தொலைபேசி உரையாடலின்போது பொருளாதார நெருக்கடி காரணமாக இலங்கை தமிழர்கள் தங்கள் நாட்டை விட்டு வெளியேற வேண்டிய கட்டாயத்தில் இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டது.
உணவு மற்றும் பிற அத்தியாவசிய பொருட்களை இலங்கைக்கு அனுப்புவதற்கு மத்திய அரசு அனுமதி தருவதாக தகவல் வெளியான இந்த தருணத்தில் தூத்துக்குடி துறைமுகத்தில் இருந்து தானியங்கள், காய்கறிகள் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களை இலங்கையின் வடக்கு மற்றும் கிழக்கு பகுதியிலும், தலைநகர் கொழும்பில் வாழும் இலங்கைத் தமிழர்களுக்கும், தோட்டங்களில் பணிபுரிந்து வருபவர்களுக்கும் பொருட்களை அனுப்புவதற்கு தமிழ்நாடு அரசு தயாராக உள்ளது. எனவே இலங்கையில் நிலவும் மோசமான நிலையை கருத்தில் கொண்டு விரைவில் பொருட்களை அனுப்புவதற்கு வசதியை ஏற்படுத்தி தருமாறு வெளியுறவுத்துறை அமைச்சரை கேட்டுக் கொள்கிறேன். மேலும், யாழ்ப்பாணம் சிறையில் உள்ள மீனவர்களை விடுதலை செய்வதற்கு விரைந்து முயற்சிகள் எடுக்க வேண்டும்” என்று அந்தக் கடிதத்தில் அவர் தெரிவித்திருந்தார்.