Categories
மதுரை மாவட்ட செய்திகள்

மீனாட்சி அம்மன் கோவிலில்… “நாள் முழுவதும் அன்னதான திட்டம்”… அமைச்சர் அறிவிப்பு…!!!

மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் தினந்தோறும் “அன்னதான வழங்கும் திட்டம்” ஆரம்பிக்கப்படுவதாக இந்து சமய அறநிலைத்துறை அமைச்சர் அறிவித்துள்ளார்.

நேற்று மானியக் கோரிக்கையின் போது சட்டசபையில்  இந்து சமய அறநிலை துறை அமைச்சர் மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் நாள்தோறும் “அன்னதானம் வழங்கும் திட்டம்” தொடங்கப்படுவதாக அறிவித்துள்ளார். இதுகுறித்து மீனாட்சி அம்மன் கோவிலுக்கு வந்த பக்தர்களளிடம் கருத்து கேட்கப்பட்டது.

அதில் சென்னையை சேர்ந்த பக்தர் தமிழரசி ஆறுமுகம் கூறியிருப்பதாவது, உலக புகழ் பெற்றது மதுரை மீனாட்சி அம்மன் கோவில். இந்த கோவிலுக்கு வரும் பக்தர்களுக்கு அரசு நாள் முழுவதும் அன்னதானம் வழங்கும் திட்டத்தை தொடங்கி இருப்பது மிகவும் வரவேற்ககூடியது. இந்த கோவிலில் பழங்காலத்தில் அன்னக்குழி மண்டபம் பகுதியில் மீனாட்சி அம்மன் கோவிலுக்கு வரும் பக்தர்களுக்கு நாள் தோறும் அன்னதானம் வழங்குவார்கள். அந்தக் கூற்றை தற்சமயம் அரசு உண்மையாக்கியது.

இதேபோன்று பழனி கோவிலுக்கு எப்போது சென்றாலும் அன்னதான சாப்பிடுவது போன்று இங்கேயும் காலை முதல் மாலை வரை அன்னதானம் வழங்க வேண்டும். அங்கு உள்ளது போன்றே இங்கும் அன்னதான கூடம் அமைக்க வேண்டும். தற்சமயம் கோயிலுக்கு உள்ளூர் பக்தர்களை விட வெளியூர் பக்தர்கள் தான் அதிகமானவர்கள் வருகிறார்கள். அவர்களின் வயிற்றுப பசியைப் போக்குவதற்கு இந்தத் திட்டம் மிகவும் அவசியம் என்று தெரிவித்தனர்.

இதனையடுத்து மதுரையை சேர்ந்த சோலைராஜ் கூறியதாவது, மதுரை மீனாட்சி அம்மன் கோவிலுக்கு நாள்தோறும் நான் வந்து செல்கிறேன். தற்போது மதிய நேரத்தில் மட்டும் அன்னதானம் குறைவான பக்தர்களுக்கு வழங்கப்பட்டு வந்தது. இந்நிலையில் அரசு அறிவித்த நாள் முழுவதும் அன்னதான திட்டம் மூலம் அதிகமான பக்தர்கள் பயனடைவார்கள். தற்போது கோவிலுக்கு வெளியூரிலிருந்து அதிகமான பக்தர்கள் வருகின்றார்கள். இது அவர்களுக்கு மிகவும் மகிழ்ச்சிகரமான விஷயம். இந்த திட்டத்தை அரசு தொடர்ந்து செயல்படுத்த வேண்டும் என்று தெரிவித்தார்.

இதைத்தொடர்ந்து  காரைக்குடியை சேர்ந்த பரமேஸ்வரி கார்த்திக் கூறியிருப்பதாவது, நான் மீனாட்சி அம்மன் கோவிலுக்கு மாதம் ஒருமுறை குழந்தையுடன் வருவேன். இரண்டு முறை மதியம் அன்னதானம் டோக்கன் வாங்கி சாப்பிட்டு இருக்கிறேன் மிகவும் அருமையாக இருக்கும். ஆனால் இந்த அன்னதானம் வழங்கப்படுவது சில பக்தர்களுக்கு தெரியவில்லை. எனவே அன்னதானம் வழங்குவதை பக்தர்கள் அனைவரும் பார்க்கும் வகையில் அறிவிப்பு பலகை கோவில் வளாகம் முழுவதும் வைக்கவேண்டும். அந்த வகையில் தற்போது காலை முதல் மாலை வரை அன்னதானம் வழங்க உள்ளது மிகவும் பாராட்டத்தக்கது என்று தெரிவித்தார்.

இதனையடுத்து மதுரையை சேர்ந்த சரோஜா கூறியதாவது, நான் தினமும் மீனாட்சி அம்மன் கோவிலுக்கு வந்து செல்வேன். அடிக்கடி கோவில் அன்னதான சாப்பிடும்போதும் நீண்ட வரிசையில் நின்று சாப்பிட்டு இருக்கேன். தற்போது அரசு அறிவித்துள்ள இந்த நாள் முழுவதும் அன்னதான திட்டம் பக்தர்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும். மேலும் வெளியூரில் இருந்து வரும் பக்தர்கள் அதிகமானவர்கள் அவர்களின் வயிற்றுப் பசியைப் போக்குவதற்கு இந்த திட்டம் மிகவும் அவசியம். அவர்களுக்கு இந்த திட்டம் சென்றடைய வேண்டும் அதற்கான ஏற்பாட்டை கோவில் நிர்வாகம் முன்னின்று செய்ய வேண்டும் என்று கூறினார்.

Categories

Tech |