மீன் பிடிக்க சென்ற தொழிலாளி காவிரி ஆற்றில் விழுந்து உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
நாமக்கல் மாவட்டம் குமாரபாளையத்தை அடுத்துள்ள சாணார்பாளையம் பகுதியில் லட்சுமணன் என்பவர் வசித்து வந்துள்ளார். கூலித் தொழிலாளியான இவர் அவ்வபோது காவிரி ஆற்றில் மீன் பிடிப்பது வழக்கம். இந்நிலையில் கடந்த 22ஆம் தேதி காவிரி ஆற்றுக்கு மீன்பிடிக்க சென்ற லட்சுமணன் மீண்டும் வீடு திரும்பவில்லை. இதனையடுத்து லட்சுமணன் காணவில்லை என அவரது குடும்பத்தினர் குமாரபாளையம் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர்.
அந்தப் புகாரின் அடிப்படையில் காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து மாயமான லட்சுமணனை தேடி வந்துள்ளனர். இந்நிலையில் முன்தினம் சமயசங்கிலி பகுதியில் உள்ள காவிரி ஆற்றில் ஆண் ஒருவரின் பிணம் கிடப்பதாக அப்பகுதியினர் காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற காவல்துறையினர் அந்த உடலை மீட்டு விசாரணை நடத்தியதில் 2 தினங்களுக்கு முன் மாயமான லட்சுமணன் என்பது தெரியவந்துள்ளது.
இதனைதொடந்து அவரது உடலை மீட்டு உடற்கூராவிர்க்காக குமாரபாளையம் அரசு மருத்துவமனைக்கு காவல்துறையினர் அனுப்பி வைத்துள்ளனர். மேலும் இதுகுறித்து நடத்திய விசாரணையில் லட்சுமணன் மீன் பிடிப்பதற்காக வெடி வைத்தபோது அந்த வெடி எதிர்பாராத விதமாக அவரது கையில் இருந்து சிதறியுள்ளது. இதில் படுகாயமடைந்த அவர் ஆற்றில் விழுந்து உயிரிழந்தது தெரியவந்துள்ளது. இச்சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.