பெரம்பலூர் வெள்ளாறு தடுப்பணையில் 10 வயது சிறுவன் தவறி விழுந்து பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
அரியலூரில் கவியரசன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு கனிமொழி என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதிகளுக்கு ஹரிரோஜன்(10) என்ற மகன் இருந்தான். ஹரிரோஜன் நான்காம் வகுப்பை தனியார் பள்ளி ஒன்றில் படித்து வந்துள்ளான். இந்நிலையில் சில தினங்களுக்கு முன் ஹரிரோஜன் அகரம் சிகூர் கிராமத்தில் வசித்து வரும் தனது பாட்டி மின்னல்கொடி வீட்டிற்கு தனது தாயுடன் சென்றுள்ளார். இதையடுத்து ஹரிரோஜன், தனது நண்பனான அதே பகுதியில் வசித்து வரும் பூமாலை என்பவருடைய மகன் ரித்திக்(12) அழைத்துக்கொண்டு நேற்று மதியம் வெள்ளாறு தடுப்பு அணைக்கு மீன் பிடிப்பதற்காக சென்றுள்ளான்.
அப்போது ஹரிரோஜன் அங்கு தேங்கிக்கிடந்த நீரில் எதிர்பாராத விதமாக தவறி விழுந்தான். அதனை கண்ட சிறுவனுடைய நண்பன் ரித்திக் கூச்சலிட்டு அக்கம்பக்கத்தினரை அழைத்துள்ளான். இந்த சத்தம் கேட்டு அங்கு வந்த சிலர் ஹரிரோஜனை மீட்டனர். ஆனால் அவன் நீரில் மூழ்கியதில் பரிதாபமாக இறந்துவிட்டான். இந்த சம்பவம் குறித்து தகவலறிந்து வந்த மங்களமேடு காவல்துறையினர் சிறுவனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இந்த சம்பவம் குறித்து காவல்துறையினர் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.