கடலில் தவறி விழுந்து மீனவர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள குளச்சல் அருகே கொட்டில்பாடை பகுதியில் சேசடிமை என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு அலெக்ஸ் என்ற மகன் இருந்துள்ளார். இவர் மீன்பிடி தொழில் செய்து வந்துள்ளார். இவர் கடந்த 19-ஆம் தேதி சூசை நாயகம் என்பவருக்கு சொந்தமான விசைப்படகில் முட்டம் துறைமுகத்திலிருந்து 11 பேருடன் சேர்ந்து ஆழ்கடலுக்கு மீன்பிடிக்க சென்றுள்ளார். இவர்கள் மீன் பிடித்துக் கொண்டிருந்தபோது அலெக்ஸ் தன்னுடைய வலையில் சிக்கிய மீனை இழுத்துள்ளார். அப்போது எதிர்பாராதவிதமாக அலெக்ஸ் கடலுக்குள் விழுந்தார். இதைப்பார்த்து அதிர்ச்சியடைந்த சக மீனவர்கள் கடலுக்குள் இறங்கி அலெக்ஸ் தேடியுள்ளனர். ஆனால் அலெக்ஸ் கடலுக்குள் மூழ்கி விட்டார்.
அதன்பிறகு மீனவர்கள் தங்களுடைய வலையை கடலுக்குள் போட்டு அலெக்ஸை தேடும் முயற்சியில் ஈடுபட்டனர். இவர்களின் அருகில் மீன் பிடித்துக் கொண்டிருந்த 8 விசைப்படகுகளிலின் மீனவர்கள் அலெக்ஸை தேடும் பணியில் ஈடுபட்டனர். அதன்பின் நண்பகல் நேரத்தில் அலெக்ஸின் உடல் வலையில் சிக்கியது. இதனையடுத்து அலெக்ஸின் உடல் துறைமுகத்திற்கு கொண்டு வரப்பட்டது. இதுகுறித்து குளச்சல் கடலோர பாதுகாப்பு காவல் துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அந்த தகவலின்படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற காவல்துறையினர் அலெக்ஸ் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.