ஆற்றில் மிதந்த சடலத்தால் பழங்கள்ளிமேடு கிராமத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
நாகப்பட்டினம் மாவட்டத்திலுள்ள பழங்கள்ளிமேடு கிராமத்தில் சின்னபொண்ணு என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் அடப்பாற்றில் தினமும் இறால் மீன் பிடித்து விற்பனை செய்து வந்துள்ளார். இவருக்கு 2 மகள்களும், 2 மகன்களும் உள்ளனர். இந்நிலையில் ஞாயிற்றுக்கிழமையன்று இறால் மீன் பிடிப்பதர்க்காக சென்ற சின்னபொண்ணு வீடு திரும்பவில்லை.
இவரது குடும்பத்தினர் பல இடங்களில் தேடியும் சின்னபொண்ணு கிடைக்கவில்லை. இதனையடுத்து திங்கட்கிழமை காலை 10 மணியளவில் ஆற்றில் சின்னப்பொண்ணு சடலமாக மிதந்துள்ளார். இதனை கண்ட அக்கம் பக்கத்தினர் காவல்துறையினருக்கு தகவல் அளித்தனர். அந்த தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற காவல்துறையினர் சின்னபொண்ணுவின் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.