அமெரிக்கர்கள் அனைவரும் கட்டாயம் முகக்கவசம் அணியவேண்டும் என்று டிரம்ப் நிர்வாகம் அறிவித்துள்ளது.
உலகம் முழுவதும் பரவி கொண்டிருக்கும் கொரோனா வைரஸால் தற்போது வரை 7 லட்சத்துக்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளனர். கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்கும் நடவடிக்கைகளில் முக்கியமான ஒன்றாக முகக்கவசம் அணிதல் கருதப்படுகிறது. முகக்கவசம் அணிவதன் மூலம் கொரோனா பரவலை வெகுவாக குறைக்கலாம் என மருத்துவத்துறையினர் கூறியுள்ளனர். அதனால் பல நாடுகள் மக்கள் முகக்கவசம் அணிவதை கட்டாயமாக்கியுள்ளது. ஆனால், கொரோனா வைரஸ் பரவியவர்களின் எண்ணிக்கை மற்றும் உயிரிழப்பு எண்ணிகையில் உலக அளவில் முதலிடத்தில் உள்ள அமெரிக்கா, மக்கள் முகக்கவசம் அணிவதை கட்டாயமாக்கவில்லை.
அமெரிக்கர்கள் முகக்கவசம் கட்டாயம் அணிய வேண்டும் என்று அதிபர் டிரம்ப் வலியுறுத்தி வந்தாலும், அது தொடர்பாக அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் ஒன்றும் அவர் வெளியிடவில்லை. முகக்கவசம் அணிய உத்தரவிடும் உரிமை மாகாண கவர்னர்களிடம் உள்ளதாகவும், கவர்னர்கள் அந்த உத்தரவை பிறப்பிக்கலாம் எனவும், அந்த சுதந்திரத்தில் தான் தலையிட விரும்பவில்லை எனவும் டிரம்ப் கூறியுள்ளார்.அதனால் அமெரிக்காவின் பல்வேறு மாகாணங்களில் மக்கள் முகக்கவசம் அணிவது கட்டாயமாக்கப்படாமல் இருப்பதால் கொரோனா தொடர்ந்து அதிகரித்துக்கொண்டே செல்கிறது.
இந்த நிலையில்,வெள்ளைமாளிகையில் அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் இன்று செய்தியாளர்களிடம் கூறும்போது, ‘அமெரிக்கர்கள் அனைவரும் முகக்கவசம் அணிய வேண்டும் என எனது நிர்வாகம் வலியுறுத்துகிறது. முகக்கவசம் அணிவது தேசப்பற்று மிக்க செயல். முகக்கவசம் அணிந்தால் மிகவும் நன்றாக இருக்கலாம், நன்றாக இருக்கலாம், அல்லது நன்றாக இல்லாமல் கூட இருக்கலாம். இதனால் நீங்கள் இழக்கப்போவது என்ன?. ஆனால், மீண்டும் கூறுகிறேன் மாஸ்க் அணிய உத்தரவிடுவது தொடர்பான முடிவுகளை கவர்னர்களை தான் எடுக்க வேண்டும். அதில் குறிப்பிட்ட சுதந்திரம் இருக்க வேண்டும்” என்று அவர் கூறியுள்ளார்.