கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள கணபதி ராஜ வீதியில் வெங்கடேஷ் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் கூலி வேலை பார்த்து வந்துள்ளார். இவருக்கு மனைவி மற்றும் 14 வயதுடைய மகன் இருக்கின்றனர். இந்நிலையில் மது குடிக்கும் பழக்கத்திற்கு அடிமையான வெங்கடேஷ் அடிக்கடி தனது மனைவியுடன் தகராறு செய்து வந்துள்ளார். மேலும் போதையில் சாலையில் நடந்து செல்பவர்களிடமும் தகராறு செய்வதை வழக்கமாக வைத்துள்ளார். இதனால் கணவன் மனைவிக்கு இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டதால் வெங்கடேஷின் மனைவி தனது மகனுடன் ராமநாதபுரத்தில் இருக்கும் தாய் வீட்டிற்கு சென்றுவிட்டார். நேற்று முன்தினம் கணபதி சங்கனூர் சாலையில் புதிதாக திறக்கப்பட்ட நகர் நல மைய வளாகத்தில் போதையில் வெங்கடேஷ் படுத்து கிடந்துள்ளார்.
நேற்று காலை முகத்தில் ரத்த காயங்களுடன் வெங்கடேஷ் இறந்து கிடந்ததை பார்த்த பொதுமக்கள் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அதன்படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார் வெங்கடேஷின் உடலை மீட்டு கோவை அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர். இதுகுறித்து வழக்கு பதிந்த போலீசார் கண்காணிப்பு கேமரா காட்சிகளை ஆய்வு செய்தபோது வெங்கடேஷுடன் இரண்டு பேர் தகராறு செய்து அவரை அடித்தது தெரியவந்தது. இதனால் சந்தேகத்தின் பேரில் போலீசார் 2 பேரை பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.