சென்னை மாவட்டத்தில் உள்ள கொடுங்கையூர் திருவள்ளூர் தெருவில் ராம்குமார் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் ஆன்லைன் மூலம் வீடுகளுக்கு உணவு விநியோகம் செய்யும் நிறுவனத்தில் ஊழியராக பணிபுரிந்து வந்துள்ளார். இவருக்கு மாலதி என்ற மனைவியும், ஒரு குழந்தையும் இருக்கின்றனர். கடந்த 3 நாட்களுக்கு முன்பு மாலதி தனது குழந்தையுடன் தாய் வீட்டிற்கு சென்றதால் ராம்குமார் மட்டும் வீட்டில் தனியாக இருந்துள்ளார். நேற்று நீண்ட நேரமாகியும் வீட்டின் கதவை திறக்கப்படாததால் சந்தேகமடைந்த அக்கம் பக்கத்தினர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அதன்படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார் வீட்டின் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தபோது கட்டிலில் ராம்குமார் மர்மமான முறையில் இறந்து கிடப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தனர்.
அவரது உடல் முழுவதும் போர்வையால் சுற்றபட்டும் தலையணை உறையால் முகம், தலை மூடப்பட்டு அதன் மீது பாலித்தீன் பையால் சுற்றி கயிறு போட்டு கட்டி இருந்தது. இதனையடுத்து போலீசார் ராம்குமார் உடலை மீட்டு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இதுகுறித்து வழக்குபதிந்த போலீசார் ராம்குமார் முகத்தில் தலையணை உறைக்கு மேல் பாலித்தீன் பையை போட்டு மூச்சு திணற செய்து தற்கொலை செய்து கொண்டாரா? அல்லது யாரேனும் அவரை கொலை செய்தனரா…? என்ற கோணத்தில் விசாரணை நடத்தி வருகின்றனர்.