முகப்பரு அதிகமாக இருந்ததால் என்ஜினியர் மனைவியுடன் சேர்ந்து வாழ மறுப்பு தெரிவித்து அடித்து துன்புறுத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள காந்திபுரம் பகுதியில் சாப்ட்வேர் என்ஜினீயரான பிச்சைமுத்து என்பவர் வசித்து வருகிறார். கடந்த 2020-ஆம் ஆண்டு பிச்சைமுத்து கோவையில் இருக்கும் தனியார் வங்கியில் அதிகாரியாக வேலை பார்க்கும் ஒரு பெண்ணை திருமணம் செய்துள்ளார். இந்த தம்பதிகளுக்கு குழந்தை இல்லை. இந்நிலையில் பெண்ணின் முகத்தில் திடீரென முகப்பரு அதிகமாக வந்ததால் பிச்சைமுத்து அவருடன் சேர்ந்து வாழ மறுப்பு தெரிவித்துள்ளார்.
மேலும் அந்த பெண்ணை பிச்சைமுத்து செல்போனில் ஆபாசமாக புகைப்படம் எடுத்து வைத்துள்ளார். கடந்த 25-ஆம் தேதி செல்போனில் இருக்கும் ஆபாச புகைப்படங்களை மனைவியிடம் காட்டி அவரை அடித்து துன்புறுத்தி இதனை யாரிடமும் சொல்லக்கூடாது என பிச்சைமுத்து மிரட்டியுள்ளார். இதற்கு பிச்சை முத்துவின் தந்தை செல்லதுரை, தாயார் விஜயலட்சுமி, சகோதரி மகேஸ்வரி, சகோதரன் முத்துக்குமார் ஆகியோர் உடந்தையாக இருந்துள்ளனர்.
இதுகுறித்து அந்த பெண் கோவை மத்திய அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் பிச்சைமுத்துவை கைது செய்தனர். மேலும் செல்லதுரை, ஜெயலட்சுமி, மகேஸ்வரி, முத்துக்குமார் ஆகிய 4 பேர் மீதும் காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.