டி- 20 உலக கோப்பை கிரிக்கெட் தொடரில் பாகிஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் இந்தியா தோல்வியைத் தழுவிய நிலையில், வேக பந்துவீச்சாளர் முகமது ஷமியை சமூக வலைதளங்களில் விமர்சனம் செய்தவர்களுக்கு அரசியல் தலைவர்கள், விளையாட்டு வீரர்கள், பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.
டி20 உலக கோப்பை கிரிக்கெட் தொடரில் ஒட்டுமொத்த கிரிக்கெட் உலகமும் உற்று நோக்கியிருந்த பாகிஸ்தான் அணிக்கெதிரான போட்டியில் இந்தியா வெற்றி வாய்ப்பை இழந்தது. இதில் இந்திய வேகப்பந்து வீச்சாளர் முகமது ஷமியை சமூக வலைதளங்களில் ட்ரோல் செய்து ரசிகர்கள் பலரும் விமர்சனம் செய்யத் தொடங்கினர். ஒரு கட்டத்தில் எல்லை மீறி மதரீதியாகவும் ஷமியின் மீது விமர்சனங்கள் வைக்கப்பட்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இதையடுத்து முகமது ஷமிக்கு ஆதரவாக அரசியல் தலைவர்கள், முன்னாள் இந்நாள் கிரிக்கெட் வீரர்கள், டுவிட்டரில் பதிவிட்டு வருகின்றனர். இந்திய அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரர் சச்சின், இர்பான் பதான், கௌதம் கம்பீர், ஆர்.பி.சிங், ஹர்பஜன் சிங்,சேவாக் உள்ளிட்ட வீரர்கள் முகமது ஷமிக்கு ஆதரவுக் குரல்கள் எழுப்பியுள்ளனர். காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவரும், மக்களவை உறுப்பினருமான ராகுல் காந்தி ஷமிக்கு ஆதரவு தெரிவித்துள்ளார்.
அவரது ட்விட்டர் பதிவில் யாரும் எந்த அன்பையும் பொழியாததால் அவர்கள் வெறுப்பால் நிறைந்து உள்ளார்கள் எனவும், அவர்களை மன்னித்து விடுங்கள் எனவும், கூறியுள்ளார். மேலும் நாங்கள் உங்களுடன் இருக்கிறோம் எனவும் ஷமிக்கு ஆதரவு தெரிவித்துள்ளார்.