Categories
மாநில செய்திகள்

முகாந்திரம் இருப்பதால் விஜய் வீட்டில் சோதனை: அமைச்சர் ஜெயக்குமார் தகவல்

முகாந்திரம் இருப்பதால்தான் நடிகர் விஜய் வீட்டில் வருமான வரிச் சோதனை நடப்பதாகவும், அதற்கும் அரசிற்கும் எந்தத் தொடர்பும் இல்லையென்றும் மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.

சென்னை மாநிலக் கல்லூரியின் 150ஆவது பட்டமளிப்பு விழா சென்னைப் பல்கலைக்கழக நூற்றாண்டு விழா அரங்கில் நடைபெற்றது. இவ்விழாவில் உயர்கல்வித்துறை அமைச்சர் கே.பி. அன்பழகன், மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார், உயர்கல்வித்துறைச் செயலாளர் அபூர்வா ஆகியோர் கலந்துகொண்டு மாணவர்களுக்கு பட்டங்களை வழங்கினர்.

இதில் இளங்கலை பட்டப்படிப்பில் 1,600 மாணவர்கள், முதுகலை பட்டப்படிப்பில் 700 மாணவர்கள், எம்ஃபில் பட்டப்படிப்பில் 150 மாணவர்கள் என 2,450 மாணவர்களுக்கு பட்டங்கள் வழங்கப்பட்டன.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார், ”முதுமலையில் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் கலந்துகொண்ட நிகழ்ச்சியில் நடந்தது குறித்து அவரிடம் கேட்டேன். அதற்கு, முதுமலைப் பகுதி காடு என்பதால் அங்கிருந்த செடிக் கொடிகள் காலில் சுற்றிக் கொண்டதாகவும், அதை எடுத்து விடுமாறு மாணவனைக் கேட்டுக் கொண்டதாகவும் அவர் கூறினார். தவறான உள்நோக்கத்துடன் ஏதும் செய்யவில்லை என்றும் அவர் தெரிவித்தார். 70 வயதைக் கடந்த அவர், முதுமையின் காரணமாக குனிந்து அந்தச் செடிகளை அகற்ற முடியாத காரணத்தால், மாணவனை அழைத்து இருக்கலாம்.

பாமக நூறு சதவீதம் அதிமுகவுடன்தான் கூட்டணியில் உள்ளது. இதில் எந்த சந்தேகமும் இல்லை. ஒவ்வொரு கட்சியும் ஆட்சியைப் பிடிக்க வேண்டும் என்ற எண்ணத்தில் தான் கட்சி ஆரம்பிக்கின்றனர். தங்களுடைய தொண்டர்களை உற்சாகப்படுத்த, 2021இல் ’ஆட்சியை பிடிப்போம்’ என்று ராமதாஸ் பேசி இருக்கலாம். அது பாமகவின் உரிமை.

வருமான வரித்துறை என்பது ஒரு தனித்த அமைப்பாகும். அவர்களுக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் விஜய் வீட்டில் விசாரணை நடத்தி வருகின்றனர். முகாந்திரம் இருப்பதால்தான் சோதனை நடைபெற்று வருகிறது. அது அவர்களுடைய கடமை. அதற்கும் அரசிற்கும் எந்தவித சம்பந்தமும் இல்லை.

டிஎன்பிஎஸ்சி முறைகேடுகள் குறித்து சிபிசிஐடி முழுமையாக வெளிப்படைத்தன்மையுடன் விசாரித்து குற்றவாளிகளைக் கைது செய்துவருகிறது. தமிழகத்தைச் சார்ந்த அதிகாரிகள்தான் சிபிஐயையிலும் பெருமளவில் பணியில் உள்ளனர். எனவே சிபிசிஐடி விசாரணையே போதுமானது“ என்றார்

Categories

Tech |