குமாரபுரம் பகுதியில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டு முகாம்களில் தங்கியிருந்த மக்களை முகாமை விட்டு வெளியேறுமாறு கூறியதால் அவர்கள் திடீர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
கன்னியாகுமரி மாவட்டத்தில் பெய்து வரும் தொடர் கனமழை காரணமாக பத்மநாபபுரம் ஏரியில் திடீர் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு கால்வாயில் உடைப்பு ஏற்பட்டது. இதனால் முட்டைக்காடு காலனி பகுதியில் வெள்ள நீர் சூழ்ந்ததால் அப்பகுதியில் உள்ள 20க்கும் மேற்பட்ட வீடுகளில் வசித்து வந்த மக்கள் அருகே உள்ள அரசு தொடக்கப் பள்ளியில் அமைக்கப்பட்டிருந்த முகாம்களில் தங்க வைக்கப்பட்டிருந்தனர். இந்நிலையில் மழை வெள்ளம் சூழ்ந்த பகுதிகளில் இருந்து தற்போது வெள்ளநீர் கொஞ்சம் கொஞ்சமாக வடிய தொடங்கியுள்ளது. எனினும் முழுமையாக முடியவில்லை என கூறப்படுகிறது.
இதற்கிடையே அதிகாரிகள் முகாம்களில் தங்கியிருந்த மக்களை முகாம்களில் இருந்து வெளியேறுமாறு கூறியுள்ளனர். இதனால் அதிர்ச்சி அடைந்த மக்கள் முகாம்களில் இருந்து வெளியேறி தாங்கள் எங்கு செல்வது என்று தெரியாமல் முகாம்களிலிருந்து தன் செல்ல மறுத்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதுகுறித்து தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு உடனடியாக வந்து அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர் மேலும் வெள்ள நீர் முழுவதுமாக வடியும் வரை முகாம்களிலேயே தங்கியிருந்து கொள்ளலாம் என கூறினர். இதனைத் தொடர்ந்து அவர்கள் போராட்டத்தை கைவிட்டனர்.