தமிழகத்தில் தேர்தல் முடிவுக்கு பின்னர், கமல்ஹாசன் ஜனநாயகத்தன்மையோடு நடந்துகொள்ளவில்லை என குற்றஞ்சாட்டி மநீம துணைத் தலைவர் பதவியை ராஜினாமா செய்து கட்சியிலிருந்தும் விலகினார் மகேந்திரன். மேலும் அவர் விரைவில் திமுகவில் இணைவார் என்று கடந்த சில மாதங்களாக கூறப்பட்டு வந்த நிலையில் இன்று மாலை 5 மணியளவில் திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைவரும், முதலமைச்சருமான மு.க. ஸ்டாலின் முன்னிலையில் திமுகவில் இணையவுள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்.
கொரோனா சூழ்நிலையை கருத்தில் கொண்டு 78 பேர் மட்டுமே நேரில் வந்து கட்சியில் இணையவுள்ளதாக மகேந்திரன் தெரிவித்துள்ளார். மேலும் கட்சியில் இணையவுள்ள 11000 பேரின் முழு விவரங்கள் அடங்கிய தொகுப்பு புத்தகம் முதலமைச்சர் மு.க. ஸ்டாலினிடம் சமர்பிக்கப்படும் எனவும் தெரிவித்துள்ளார். 2021 சட்டமன்ற தேர்தலுக்கு பிறகு அதிமுக, அமமுக, தேமுதிக மநீம என பல்வேறு கட்சிகளிலிருந்து தொண்டர்கள் திமுகவில் இணைந்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.