கர்நாடகாவில் தற்கொலைக்கு முயன்ற 2 வது காதலியை மீட்கச் சென்ற காதலன் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கர்நாடகாவைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் லாய்டு டிசோசா. அபுதாபியில் பணியாற்றி வந்துள்ள இவர் கொரோனா பெருந்தொற்றின் காரணமாக ஒரு ஆண்டு இந்தியாவில் தங்கலாம் என்ற எண்ணத்தில் நாடு திரும்பினார்.இந்நிலையில் இந்தியாவிற்கு வந்த டிசோசோ சமூக ஊடகம் வழியே முன்பே தொடர்பில் இருந்துள்ள இரண்டு பெண்களுடன் மீண்டும் நட்பை புதுப்பித்துள்ளார். இதில் முதல் பெண்ணை காதலித்து வந்த நிலையில், இரண்டாவது பெண்ணிடமும் காதலில் ஈடுபட்டு உள்ளார். இது ஒரு காலகட்டத்தில் இரண்டு பெண்களுக்கும் தெரியவந்துள்ள நிலையில் அவர்கள் இரண்டுபேரும் டிசோசாவிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது.
எனவே , டிசோசா அந்த இரண்டு பெண்களையும் அமைதி படுத்துவதற்காக சோமேஷ்வரா பீச்சிற்கு அழைத்து சென்றுள்ளார். அங்கு அவர்களுடன் சமரச பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளார். அப்போது வாக்குவாதம் முற்றிய நிலையில் இரண்டு பெண்களில் ஒருவர் தண்ணீருக்குள் குதித்து தற்கொலைக்கு முயன்றுள்ளார். இதனால் அவரை காப்பாற்றுவதற்காக டிசோசாவும் தண்ணீருக்குள் குதித்துள்ளார்.
இதில் அவர் அந்தப் பெண்ணைக் கரை சேர்த்துவிட்டார். ஆனால் அவரால் வெளியே வரமுடியவில்லை, நீரோட்டம் அவரை உள்ளே இழுத்துச் சென்றுள்ளது. உடனே அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் அவரை மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றதில் அவர் உயிரிழந்து விட்டார் என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். இந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.