திமுக தலைவர் முக.ஸ்டாலின் காணொலிக் காட்சி மூலமாக மாவட்ட செயலாளர்கள் எம்எல்ஏக்கள் எம்பிக்கள் கூட்டம் தொடங்கியது.
திமுக தலைமை வெளியிட்ட அறிவிப்புக்கிணங்க திராவிட முன்னேற்ற கழக சட்டமன்ற உறுப்பினர்கள், பாராளுமன்ற உறுப்பினர்கள், மாவட்ட செயலாளர்கள் கூட்டம் தற்போது தொடங்கி நடைபெற்று வருகின்றது. இந்த கூட்டத்தில் மொத்தம் எம்எல்ஏக்கள் 97 பேரில் கொரோனா தொற்று காரணமாக 12 பேர் பங்கேற்கவில்லை. எம்பிக்கள் 28 பேரும், மாவட்ட செயலாளர் 65 பேரும் என 160க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டார்கள்.
திமுக அமைப்புச் செயலாளர் ஆர் எஸ் பாரதி இந்த கூட்டத்தை தொடங்கி வைத்தார். இதில் வரக்கூடிய ஆகஸ்ட் 7ஆம் தேதி கலைஞரின் இரண்டாம் ஆண்டு நினைவு தினத்தை எப்படி அனுசரிப்பது ? என்னென்ன நிகழ்ச்சி நடத்துவது ? என்பது குறித்து ஆலோசித்தனர். இதைத்தவிர தேர்தலுக்கான பணியை அதிமுக தொடங்கிவிட்ட நிலையில் திமுக உட்கட்சி கட்டமைப்புகளை எப்படி பலப்படுத்தவேண்டும் ? குறித்து ஆலோசிக்கின்றனர்.
மேலும் தற்போது மத்திய அரசு வெளியிட்ட புதிய கல்விக் கொள்கை குறித்து முக்கியமாக விவாதிக்கப்படும் என்று தெரிகின்றது. குறிப்பாக இந்தி திணிப்பு, சமஸ்கிருத திணிப்பு, மாநில உரிமை பறிப்பு என புதிய கல்விக் கொள்கை மூலமாக பாதிக்கப்பட்டதை கண்டித்து தீர்மானமோ அல்லது போராட்ட அறிவிப்போ வெளியாகும் என தெரிகின்றது.