சென்னை தண்டையார்பேட்டை கைலாசம் தெருவை சேர்ந்தவர் சதீஷ்குமார் (வயது 25). இவர், சென்னையில் உள்ள பிரபல நகை கடையில் வேலை செய்து வருகிறார். அதே கடையில் வேலை செய்த 20 வயதான இளம்பெண்ணை சதீஷ்குமார் காதலித்து வந்தார். இந்நிலையில், அப்பெண் சதிஷை புறக்கணித்து பெற்றோர் பார்த்து வைத்த பையனை திருமணம் செய்ய சம்மதம் தெரிவித்துள்ளார். இதனையறிந்த சதிஷ் அப்பெண்ணிடம் கேட்டபோது எங்க அப்பா அம்மா பார்த்த மாப்பிள்ளையை தான் திருமணம் செய்துகொள்வேன். முடிந்தால் தடுத்து பார் என சபதம் விட்டதாக தெரிகிறது.
இந்நிலையில், நேற்று காலை அப்பெண்ணுக்கு திருமணம் நடைபெறவிருந்த நிலையில், மண்டபத்திற்குள் நுழைந்த சதீஷ்குமார், சினிமா பட பாணியில் மணமகன் கையில் இருந்த தாலியை தட்டிப்பறித்து, தனது காதலியின் கழுத்தில் கட்ட முயன்றார். இதனால் அதிர்ச்சியடைந்த மணமக்கள் வீட்டார், சதீஷ்குமாரை மடக்கிப்பிடித்து மணப்பெண் கழுத்தில் தாலி கட்ட விடாமல் தடுத்தனர். பின்னர் அவரை சரமாரியாக அடித்து உதைத்து அவரிடம் இருந்த தாலியை பறித்தனர். இதனால் திருமண மண்டபத்தில் பரபரப்பு ஏற்பட்டது.
பின்னர் அவரை ஆர்.கே.நகர் போலீசில் ஒப்படைத்தனர். அவர்கள் இந்த வழக்கை வண்ணாரப்பேட்டை அனைத்து மகளிர் போலீசாரிடம் ஒப்படைத்தனர். மகளிர் போலீசார், மணமகன், மணமகள் மற்றும் சதீஷ்குமார் ஆகிய 3 பேரையும் அழைத்து விசாரித்தனர். அப்போது சதீஷ்குமார், “என்னை காதலித்து ஏமாற்றி விட்டு வேறு ஒருவரை திருமணம் செய்யப்போகிறாயே என கேட்டபோது, முடிந்தால் எனது திருமணத்தை தடுத்துப்பார் என மணப்பெண் சவால் விட்டார். இதனால் தான், தாலி கட்டும் நேரத்தில் மணமகனிடம் இருந்து தாலியை பறித்து மணப்பெண் கழுத்தில் கட்ட முயன்றேன்” எனக் கறினார்.
இதையடுத்து போலீசார் இரு விட்டாரையும் அழைத்து பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது மணமகன், அந்த பெண்ணை திருமணம் செய்து கொள்ள மறுத்துவிட்டார். திருமண ஏற்பாடுக்கு தாங்கள் செய்த செலவுக்கான பணத்தை மணமகள் வீட்டாரிடம் இருந்து வாங்கி தரும்படி கூறினார். அதற்கு மணப்பெண் வீட்டார் சம்மதம் தெரிவித்தனர். அந்த பெண்ணை காதலனை திருமணம் செய்து கொள்ளும்படி கேட்டனர். ஆனால் மணப்பெண், சதீஷ்குமாரை திருமணம் செய்து கொள்ள மாட்டேன் என மறுத்துவிட்டார். இதனால் நேற்று நடக்க இருந்த திருமணம் நின்று போனது. இதனால் போலீசார் 3 ேபரிடமும் எழுதி வாங்கி கொண்டு அனுப்பி வைத்தனர்.