திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள திசையன்விளை சங்னாங்குளம் பகுதியில் பகுதியில் காளிச்சந்திரன் (46) என்பவர் வசித்து வருகிறார். இவர் கூலி தொழிலாளியாக வேலை பார்த்து வருகிறார். இவர் கடந்த 35 வருடங்களாக புகழ்பெற்ற குலசை முத்தாரம்மன் திருக்கோவிலுக்கு மாலை போட்டு விரதம் இருந்து அம்மன் போன்று வேடம் அணிந்து செல்கிறார். தீவிர அம்மன் பக்தரான காளி சந்திரனுக்கு கடந்த 4 வருடங்களுக்கு முன்பாக தொண்டையில் புற்றுநோய் வந்துள்ளது. இந்த புற்று நோயால் பெரும் சிரமத்திற்கு ஆளான காளி சந்திரனை மருத்துவர்கள் கைவிட்டதாக கூறப்படுகிறது.
இருப்பினும் நம்பிக்கையை இழக்காத காளிச்சந்திரன் அம்மன் மீது உள்ள தீவிர பக்தியின் காரணமாக தொண்டைப் புற்றுநோயிலிருந்து விடுபட்டதாக கூறுகிறார். இதனால் அம்மனுக்கு நன்றி தெரிவிக்கும் விதமாக கடந்த 4 வருடங்களாக சுடுகாட்டு காளியம்மனுக்கு விரதம் இருந்து நேர்த்திக்கடன் செலுத்தி வருகிறார். இந்த வருடம் வருகிற 26-ஆம் தேதி குலசை முத்தாரம்மன் கோவிலில் கொடியேற்றத்துடன் திருவிழா தொடங்க இருக்கிறது. இதன் காரணமாக காளி சந்திரன் அம்மனுக்கு மாலை அணிந்து விரதம் இருக்கிறார்.
இவர் சுடுகாட்டு காளி வேஷம் போட்டு குலசை முத்தாரம்மனை தரிசிப்பதற்கு செல்வதால் சங்கனாங்குளத்தில் உள்ள சுடுகாட்டில் 6 அடிக்கு ஒரு நீளமான குழி தோண்டி அதில் சிறிய குடில் அமைத்து 21 நாட்களாக உணவேதும் அருந்தாமல் தண்ணீர் மட்டும் குடித்துவிட்டு விரதம் இருக்கிறார். இது குறித்து காளிச்சந்திரன் கூறியதாவது, நான் அம்மன் மீது தீவிர பக்தி உடையவன். என்னுடைய தொண்டையில் புற்றுநோய் வந்த போது மருத்துவர்கள் என்னுடைய உயிரை காப்பாற்ற முடியாது என்று கைவிட்டனர்.
ஆனால் முத்தாரம்மன் தான் என்னுடைய உயிரை காப்பாற்றினார். இதனால்தான் அம்மனுக்கு விரதம் இருந்து சுடுகாட்டு காளி வேடமடைந்து கோவிலுக்கு செல்கிறேன். நான் தினந்தோறும் மாலை 6 மணிக்கு குடில் இருக்கும் இடத்திற்கு வந்து வாசல் தெளித்து கோலம் போட்ட பிறகு அம்மனுக்கு பூஜை செய்வேன். இதனையடுத்து அந்த குழிக்குள் படுத்து தூங்கிவிட்டு மறுநாள் காலை 6:00 மணி அளவில் மீண்டும் எழுந்து குளிப்பதற்கு மட்டும் வெளியே செல்வேன்.
மற்றபடி 21 நாட்களும் குழியை விட்டு வெளியே வரமாட்டேன் என்று கூறியுள்ளார். மேலும் காளி சந்திரன் குறி சொன்னால் அத்தனையும் சரியாக இருக்கும் என்று ஊர் மக்கள் கூறுவதோடு, மருத்துவர்களே கைவிட்ட நிலையில், காளிச்சந்திரன் புற்று நோயை அம்மன் குணப்படுத்தியதாக கூறுவது அப்பகுதி மக்களிடையே மிகப்பெரிய வியப்பை ஏற்படுத்தியுள்ளது.