உக்ரைன் மீதான ரஷ்யாவின் போர் தொடர்ந்து நீடித்து வருகிறது. இதன் காரணமாக உக்ரைனின் துறைமுக நகரமான மரியுபோல் போர் காரணமாக உருக்குலைந்த நிலையில், அங்கிருந்து குடிமக்களை பாதுகாப்பாக வெளியேற்ற துருக்கி நாட்டு கப்பல்கள் அனுப்பி வைக்கப்படுகிறது. இதனிடையில் பொதுமக்கள் பெரும்பாலானோர் காயமடைந்து இருப்பதால் அவர்களை சிகிச்சைக்கு அழைத்துச் செல்லவும் துருக்கி கடற்படையினர் தயாராக இருப்பதாக அதன் பாதுகாப்பு அமைச்சர் அகர் தெரிவித்துள்ளார்.
இதற்கிடையில் கடல்வழி பாதையில் ஆபத்தை உருவாக்கக்கூடிய கண்ணி வெடிகளைக் கண்டுபிடித்து அகற்றும் பணியில் துருக்கி கடற்படையினர் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் ருமேனியா கடற்படையினரும் கடல் பாதையில் ஆபத்தான கண்ணி வெடிகளைக் கண்டு அகற்றி வருவதாக தெரிவித்து இருக்கின்றனர். உக்ரைன் தன் கண்ணி வெடிகளை கடலில் கொட்டி வைத்துள்ளதாக ரஷ்யா கடந்த வாரம் குற்றம்சாட்டி இருந்தது குறிப்பிடத்தக்கது.