உக்ரைன்-ரஷ்யா இடையே பல ஆண்டுகளாக மோதல் இருந்து வருகிறது. இதன் காரணமாக, தனது நாட்டின் பாதுகாப்பை பலப்படுத்தி கொள்வதற்கு நேட்டோ நாடுகள் அமைப்பில் இணைய உக்ரைன் விருப்பம் தெரிவித்தது. இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் ரஷ்யா, உக்ரைன் எல்லையில் 1.50 லட்சம் ராணுவ வீரர்களை குவித்தது. இதற்கு அமெரிக்கா மற்றும் பல ஐரோப்பிய நாடுகள் எதிர்ப்பு தெரிவித்து வந்தன.
இந்நிலையில், உலக நாடுகள் எதிர்பார்த்தது போலவே உக்ரைன் மீது போர் தொடுக்க ரஷ்ய ராணுவத்துக்கு அதிபர் புடின் கடந்த 24-ஆம் தேதி அன்று உத்தரவிட்டார். இதையடுத்து ரஷ்யா உக்ரைன் இடையே பயங்கர போர் வெடித்தது. இதனால் உலக நாடுகள் பெரும் அதிர்ச்சியில் உள்ளன. அதோடு மட்டுமில்லாமல் அமெரிக்கா உள்ளிட்ட பல நாடுகளும் ரஷ்யா மீது பொருளாதார தடைகளை விதித்து அந்நாட்டை நிலைகுலைய செய்துள்ளது.
இந்த நிலையில் பெலாரஸில் ரஷ்யா பேச்சுவார்த்தை நடத்த அழைப்பு விடுத்திருந்தது. இதையடுத்து உக்ரைன் நாட்டின் பிரதிநிதிகள் பெலாரஸ் நாட்டில் பேச்சுவார்த்தைக்காக வந்து கொண்டிருப்பதாக ரஷ்ய செய்தி நிறுவனம் தகவல் தெரிவித்துள்ளது. ரஷ்ய தரப்புடன் பேச்சுவார்த்தை நடத்த உக்ரேனிய தூதுக்குழு பெலாரஸ் நாட்டின் Gomel நகருக்கு செல்கிறது. பெலாரஸ் அதிபர் லுகாஷென்கோ, உக்ரைன் அதிபருடன் தொலைபேசியில் பேசிய நிலையில், உக்ரைன் தரப்பு பேச்சுவார்த்தைக்கு ஒப்புதல் அளித்துள்ளதாக உக்ரேனிய ஊடகங்களும் தெரிவித்துள்ளது.