நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் திமுக அரசை கண்டித்து ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளார்.
நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில் கன்னியாகுமரி மாவட்டத்தில் இருந்து கேரளாவிற்கு கனிம வளங்கள் கடத்தப்படுவதை திமுக அரசு தடுக்காமல் வேடிக்கை பார்த்துக் கொண்டிருப்பது போதாது என்று, தற்போது மத்திய அரசுக்கு IREL நிறுவனத்திற்கு கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள கடற்கரை நிலங்களை கொடுக்க முடிவு செய்துள்ளது. இது மக்களுக்கு செய்யும் மிகப்பெரிய துரோகம் ஆகும். கடந்த சட்டமன்ற தேர்தலின் போது திமுக அரசானது கனிம வளங்களை பாதுகாக்கும் என தேர்தல் வாக்குறுதியாக அறிவித்திருந்தது. ஆனால் இன்று வாக்குறுதியை மறந்து விட்டு மத்திய அரசுடன் கைகோர்த்து கனிம வளங்களை சுரண்டுவதற்கு திட்டமிட்டுள்ளது. தமிழகத்தில் உள்ள தூத்துக்குடி, திருநெல்வேலி மற்றும் கன்னியாகுமரியில் உள்ள கடலோரப் பகுதிகளில் ஏராளமான அரிய வகை கனிம வளங்கள் குவிந்து கிடக்கிறது.
இந்த கனிம வளங்கள் தமிழகத்தில் உள்ள பல்வேறு ஆறுகளின் மூலம் கடற்கரைகளில் சேர்க்கப்பட்டுள்ளது. கடந்த 1965-ம் ஆண்டு மத்திய அரசால் மணவாளக்குறிச்சியில் அணுசக்திக்கு தேவையான கனிம வளங்களை பிரித்தெடுப்பதற்காக IREL தொழிற்சாலை நிறுவப்பட்டது. இங்கு தாது மணலில் இருந்து அரிய வகை கனிமங்களை பிரித்தெடுப்பதால் கதிரியக்கம் அதிகமாகிறது என பல ஆய்வறிக்கைகளில் கூறப்பட்டுள்ளது. இந்த கதிரியக்கத்தின் மூலம் சுற்றுப்புற சூழல் பாதிப்படைவதோடு, 5000-க்கும் மேற்பட்ட மக்கள் புற்று நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர். அது மட்டுமின்றி பிறக்கும் குழந்தைகள் மனநல வளர்ச்சி குன்றியவர்களாகவும், முதுகு கட்டி, இதய நோய்கள், விழித்திரை பாதிப்பு, கழலை கட்டி, தீராத வாய்ப்புண் உள்ளிட்ட பல்வேறு பிரச்சனை களால் பாதிப்படைகின்றனர். இதனையடுத்து மரபணு மூலமாக புற்றுநோய் அடுத்தடுத்த தலைமுறைகளுக்கும் பரவுகிறது.
இந்நிலையில் தாது பொருட்களை பிரித்தெடுத்த பிறகு கழிவு மணல்களை கடற்கரையில் கொட்டுவதால் கடற்கரை பாலைவனமாக மாறக்கூடிய அவல நிலை ஏற்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து தாது பொருட்களை சுத்தம் செய்வதற்காக வள்ளியாற்றின் நீரை பயன்படுத்தி விட்டு கழிவு நீரை மீண்டும் ஆற்றில் ஊற்றுவதால் ஆற்றுநீர் பாழடைந்து போயிருக்கிறது. இப்படி ஏற்கனவே இருக்கும் தாது மணல் பிரித்தெடுக்கும் ஆலையால் பொதுமக்கள் ஏராளமான பாதிப்பு களை சந்தித்து வரும் நிலையில், திமுக அரசனது மத்திய அரசுக்கு தாது மண்ணை பிரித்தெடுப் பதற்காக 1144 ஹெக்டேர் நிலப்பரப்பை வழங்குவதற்கான ஒப்பந்த தரவுகளை கேட்டிருப்பது மிகப்பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்துவதோடு, தமிழக மக்களுக்கு செய்யும் துரோகத்தையும் வெளிப்படுத்துகிறது.
கடந்த 2005-ம் ஆண்டு மத்திய அரசு தாது மணல் பிரித்தெடுக்கும் ஆலைக்காக 1200 ஹெக்டேர் நிலப்பரப்பு வேண்டும் என தமிழக அரசிடம் கேட்டிருந்தது. ஆனால் அப்போதைய மாவட்ட ஆட்சியர் ஆய்வு செய்து 115 ஹெக்டேர் நிலப்பரப்பை மட்டுமே தரமுடியும் என கூறி இருந்தார். அப்படி இருக்கையில், பல்வேறு அதிகாரிகளின் ஆய்வு அறிக்கைகளை மீறி 1144 ஹெக்டேர் நிலப்பரப்பை மத்திய அரசுக்கு வழங்குவதாக கூறி இருப்பது எந்த விதத்திலும் ஏற்றுக்கொள்ள முடியாது. மேலும் மீனவ மக்களும் ஏற்கனவே நிலப்பரப்பை வழங்குவதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். எனவே திமுக அரசு தன்னுடைய ஒப்பந்தத்தை கைவிடவில்லை என்றால் குமரி மக்களின் பேராதரவோடு மாபெரும் போராட்டம் நடைபெறும் என சீமான் எச்சரித்துள்ளார்.