முட்புதரில் பல வாக்காளர் அடையாள அட்டைகள் வீசப்பட்டுள்ளது.
திருச்சி மாவட்டத்தில் உள்ள செந்தண்ணீர்புறத்தில் இருக்கும் முத்துமணி டவுன் பகுதியில் அமைந்திருக்கும் மைதானத்தின் மூன்று பக்கமும் முட்புதர்கள் அமைந்துள்ளது. அங்கு அதிக சமூக விரோத செயல்கள் நடந்து வருவதாக பொதுமக்கள் குற்றம் சாட்டி வருகின்றனர். இந்நிலையில் முட்புதர் அமைந்துள்ள இடத்தில் 260க்கும் மேற்பட்ட புகைப்பட வாக்காளர் அடையாள அட்டைகளை மர்ம நபர்கள் வீசிச் சென்றுள்ளார்கள். அவ்வழியாகச் சென்ற இளைஞர்கள் அதை பார்த்து பொன்மலை போலீஸ் நிலையத்திற்கும் வருவாய் துறை அதிகாரிகளுக்கும் தகவல் கொடுத்ததை அடுத்து சம்பவ இடத்திற்கு அவர்கள் விரைந்து வந்து அடையாள அட்டைகளை கைப்பற்றி விசாரணை நடத்தி வருகின்றார்கள்.
இந்த அட்டையானது 2006ஆம் வருடம் வாக்காளர் பெயர் பட்டியலில் பெயரை சேர்த்து அவர்களுக்கான 2007ஆம் வருடம் மார்ச் மாதம் அச்சடிக்கப்பட்டவையாகும். இதுகுறித்து அதிகாரிகள் விசாரித்த நிலையில் முதல்கட்ட விசாரணையில் சென்ற 2007ஆம் வருடம் புகைப்பட வாக்காளர் அடையாள அட்டைகளை வாக்குச்சாவடி அதிகாரி ஒருவரிடம் ஒப்படைக்கப்பட்டு அதை அவர் கொடுக்காமல் 15 வருடங்களாக பாதுகாப்பாக வைத்திருந்து தற்போது அதை வீசி இருக்கலாம் என தெரியவந்துள்ளது. இதையடுத்து அதிகாரிகள் அந்த அட்டைகளை மீட்டு தேர்தல் பிரிவு அதிகாரிகளிடம் ஒப்படைத்துள்ளனர். இது குறித்து அதிகாரிகள் விசாரணை செய்து வருகின்றார்கள்.