மே2-ஆம் தேதி தமிழக சட்டமன்ற தேர்தல் வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் வெளியிடப்பட்டது. இதில் திமுக பெரும்பான்மை இடங்களை கைப்பற்றி தமிழகத்தில் 10 ஆண்டுகளுக்கு பிறகு ஆட்சி அமைக்கிறது. இதையடுத்து மே 7-ஆம் தேதி மு.க ஸ்டாலின் முதலமைச்சராக ஆளுநர் மாளிகையில் எளிமையான முறையில் பொறுப்பேற்க இருக்கிறார்.
இந்நிலையில் தற்போது சென்னை அண்ணா அறிவாலயத்தில் மு .க ஸ்டாலின் தலைமையில் திமுக எம்எல்ஏக்கள் கூட்டம் தொடங்கியது. துரைமுருகன், பொன்முடி உள்ளிட்ட 133 எம்எல்ஏக்கள் கூட்டத்தில் பங்கேற்றுள்ளனர். திமுக எம்எல்ஏக்கள் 125 பேருடன் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட்டு வென்ற 8 பேரும் கூட்டத்தில் பங்கேற்றுள்ளனர்.
இதையடுத்து எம்எல்ஏக்கள் கூட்டத்தில் முறைப்படி திமுக சட்டமன்ற கட்சி தலைவராக மு.க ஸ்டாலின் தேர்ந்தெடுக்கப்பட்டார். இதனை தொடர்ந்து முதலமைச்சராக தேர்வு செய்யப்பட்டதையடுத்து, முக ஸ்டாலின் மூத்த திமுக தலைவர் ஆற்காடு வீராசாமியை சந்தித்து வாழ்த்து பெற்றார்.