ராஜீவ்காந்தி கொலை வழக்கில் பேரறிவாளன் விடுதலை செய்யப்பட்டார். இந்த தீர்ப்பினை அனைவரும் வரவேற்றுள்ளனர். அரசியல் பிரபலங்கள், திரையுலகினர், கட்சி பிரபலங்கள் என்று பலரும் இந்த தீர்ப்பை வரவேற்றுள்ளனர். இந்நிலையில் முதலமைச்சராக பொறுப்பேற்ற பின் முதல் முறையாக தலைமைச் செயலகத்தில் பத்திரிக்கையாளர்களை சந்தித்த முதல்வர் முக ஸ்டாலின்,” உச்சநீதிமன்ற தீர்ப்பு பற்றி சட்ட ஆலோசனை நடத்தி மற்ற ஆறு பேரையும் விடுவிக்க முயற்சி எடுப்போம்.
மாநில அரசின் கொள்கை முடிவில் தலையிட ஆளுநருக்கு அதிகாரம் இல்லை என்பது மிக மிக முக்கியமானது. மாநிலத்தின் உரிமையானது உச்சநீதிமன்ற தீர்ப்பின் மூலம் மிக கம்பீரமாக நிலைநாட்டப்பட்டுள்ளது. மாநில சுயாட்சி மற்றும் கூட்டாட்சி தத்துவத்துக்கு கிடைத்த மிகப்பெரும் வெற்றி இது” என்று தெரிவித்தார். மேலும் பேரறிவாளனுக்கு போனில் முதல்வர் ஸ்டாலின் வாழ்த்து கூறினார்.