மயிலாடுதுறை மாவட்டத்தில் முதலமைச்சர் ஸ்டாலின் ஆய்வு பணியில் ஈடுபட்ட போது,செய்தி சேகரிக்கச் சென்ற பத்திரிக்கையாளர்களை காவல்துறையினர் தடுத்து தாக்கிய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. திருக்கடையூர் ராமச்சந்திரன் வாய்க்காலில் தூர்வாரும் பணியை பார்வையிட்டு நடைபெற்ற பணிகள் குறித்த புகைப்படக் கண்காட்சியும் பார்வையிட ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இந்த நிலையில் முதல்வர் ஆய்வு செய்ததை செய்தி சேகரிக்க மாவட்ட அளவிலான தொலைக்காட்சி மற்றும் பத்திரிக்கை செய்தியாளர்கள் புகைப்படம் எடுப்பதற்கு தடை செய்யும் விதமாக காவல்துறையினர் கயிறு கட்டி தடுத்தனர்.
அதுமட்டுமல்லாமல் முதல்வருடன் வந்திருக்கும் ஊடகத்துறையினர் செய்திகளை எடுத்து சென்னையில் உள்ள செய்தி விளம்பரத்துறை மூலமாக அனுப்பி விடுவார்கள் என்றும் அவர்கள் கூறினர். இந்நிலையில் முதல்வர் ஸ்டாலின் இன் செயல்பாடுகளை புகைப்படம் எடுக்க முயன்ற பத்திரிக்கையாளர்களை காவல்துறையினர் தடுத்தனர். மீறி படம் எடுக்க முயன்ற பத்திரிக்கையாளர்களை கீழே தள்ளிவிட்டு அராஜகத்தில் ஈடுபட்டனர். பத்திரிக்கையாளர்கள் என அடையாள அட்டை காண்பித்த பிறகும் அவர்களின் நெஞ்சின் மீது கை வைத்து தள்ளி விட்டதாக பாதிக்கப்பட்ட நிபுணர்கள் தெரிவித்துள்ளனர். இதனால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
சமீபத்தில் பத்திரிகை -பத்திரிகையாளர்கள் மீது வழக்கு போடப்பட்டது சர்ச்சையான நிலையில் இந்த சம்பவம் தற்போது நடந்துள்ளது. இதற்கு கண்டனம் தெரிவித்துள்ள பத்திரிக்கையாளர் சங்கம்,காவலர்கள் மீது முதலமைச்சர் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளனர்.