Categories
மாநில செய்திகள்

முதலாமாண்டு மாணவர்களுக்கு ஆன்லைனில் தேர்வுகள்?…. தமிழக அரசு எடுக்கும் முடிவு என்ன?….!!!!!

முதலாம் ஆண்டு பொறியியல் மாணவர்களுக்கு ஆன்லைனில் தேர்வு நடத்த வேண்டும் என்ற கோரிக்கைகள் தீவிரமாகி  வருகிறது.

முதலாம் ஆண்டு பொறியியல் படிப்பு பயிலும் மாணவர்களுக்கு பருவத்தேர்வினை  ஆன்லைன் மூலம் நடத்த அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என சட்டப்பேரவை எதிர்க்கட்சித் துணைத் தலைவர் பன்னீர்செல்வம் வலியுறுத்தி இருக்கிறார்.இது பற்றி  அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், 2021 ஆம் ஆண்டு இறுதியில் கொரோனா 3ம் அலை  காரணமாக முதலாம் ஆண்டு பொறியியல் கல்லூரி மாணவ, மாணவியருக்கான வகுப்புகள் பெரும்பாலும் ஆன்லைன் மூலமாக நடத்தப்பட்டு வந்தது.

அந்த மாணவர்களுக்கான முதல் பருவ தேர்வினை இந்த மாதம் 21ம்  தேதி நேரடியாக நடத்த அண்ணா பல்கலைக்கழகம் முடிவு செய்திருப்பது கல்லூரி நிர்வாகங்கள் மற்றும் முதலாமாண்டு மாணவ மாணவியர் இடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. பெரும்பாலான கல்லூரிகளில் முதல் பருவத்திற்கான நேரடி வகுப்புகள் 60 நாட்கள் மட்டுமே நடத்தப்படுவதாகவும், நவம்பர்  மூன்றாவது வாரத்தில் வகுப்புகள் ஆரம்பிக்கப்பட்ட தருணத்தில் அனைத்து மாணவர்களும் வீட்டில் இருந்து ஆன்லைன் மூலமாக படிக்க வற்புறுத்தபட்டதாகவும், இதன் பின் இந்த ஆண்டு பிப்ரவரி மாதத்தில் நேரடி வகுப்புகள் தொடங்கப்பட்டு நிலையில் உடனடியாக பருவத் தேர்வு கால அட்டவணை அண்ணா பல்கலைக்கழகம் வெளியிட்டதாகவும் அண்ணா பல்கலைக்கழக இணைப்பு கல்லூரிகள் சார்பில் கூறப்பட்டுள்ளது.

பொறியியல் முதலாம் ஆண்டு பயிலும் 1,25,000 மாணவ மாணவியர்களின் பெரும்பாலானோர் படிப்பிற்காக உதவித்தொகையை சார்ந்திருக்கும் ஏழை எளியவர்கள் எனவும், இது அவர்களுக்கு கடினமான தருணம்  எனவும் கல்லூரிப் பேராசிரியர் தெரிவித்துள்ளதாக செய்திகள் வந்துள்ளது. மேலும் பொறியியல் கல்லூரிகளில் மாணவ, மாணவியருக்கான எட்டாம் பருவத்தேர்வு தவிர அனைத்து பருவ தேர்வுகளும் ஆன்லைன் மூலம் நடத்தப்படும் என மாநில அரசு அறிவித்த சூழ்நிலையில் அனைத்து பருவ தேர்வுகளும் வகுப்பறைகளில் நடத்தப்படும் என அண்ணா பல்கலை கழகத்தின் முடிவு ஏற்றுக்கொள்ளத்தக்கது அல்ல எனவும் பருவத் தேர்வுகளை ஒரு மாதத்திற்கு தள்ளி வைத்து ஆன்லைன் மூலம் தேர்வுகளை நடத்த வேண்டுமெனவும் கல்லூரிகள் கோரிக்கை விடுத்துள்ளதாக கூறப்பட்டிருக்கிறது.

எனவே முதல்வர் இதில் உடனடியாக கவனம் செலுத்தி அனைத்து தரப்பினரிடமும் கலந்து ஆலோசித்து பொறியியல் முதலாமாண்டு மாணவ, மாணவியரின் கோரிக்கைகளை கனிவுடன் பரிசீலித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என அதிமுக சார்பில் வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறேன் என அதில் கூறப்பட்டுள்ளது.

Categories

Tech |