நாடு நாடாக தப்பியோடும் கோத்தபய ராஜபக்ச மாலத்தீவிலிருந்து சிங்கப்பூருக்கு செல்லும் நிலையில், அங்கிருந்து கடைசியாக சவுதி அரேபியாவுக்கும் செல்லவிருப்பதாக சமீபத்திய தகவல் கிடைத்துள்ளது. இலங்கையில் ஏற்பட்டுள்ள கடும் பொருளாதார நெருக்கடிக்கு மத்தியில் மக்களின் பேரெழுச்சிக்கு பயந்து நாட்டை விட்டு வெளியேறிய அதிபர் கோத்தபய ராஜபக்ச, சவுதி அரேபியா செல்ல திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அதிபர் ராஜினாமாவை எதிர்பார்த்து இலங்கை மக்கள் காத்திருக்கும் போது கோத்தபய நாடு விட்டு நாடு விமானத்தில் பறக்கிறார்.
கோத்தபய ராஜபக்ச சிங்கப்பூர் சென்று அங்கிருந்து சவுதி அரேபியாவை அடைய முயற்சிப்பதாக அசோசியேட்டட் பிரஸ் தெரிவித்துள்ளது. புதன் கிழமை பதவி விலகுவதாக அறிவிக்கப்பட்ட போதிலும், கோத்தபய தனது வார்த்தையைக் காப்பாற்றத் தயாராக இல்லை. மாலத்தீவில் இருந்து சவுதி விமானம் மூலம் கோத்தபய சிங்கப்பூர் சென்றார். கோத்தபய, அவரது மனைவி மற்றும் அவரது குழுவினர் வியாழக்கிழமை இரவு சிங்கப்பூர் சென்றடைவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. மக்கள் எழுச்சியால் தோற்கடிக்கப்பட்ட கோத்தபய, கைது செய்யப்படுவார் என்ற அச்சத்தில் முதலில் மாலத்தீவுக்குப் பறந்தார். இதற்கு மாலத்தீவில் எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்ததையடுத்து அவர் சவுதி விமானத்தில் சிங்கப்பூர் சென்றார். அங்கிருந்து விரைவில் ஜித்தா சென்றடைவார் என தகவல் வெளியாகியுள்ளது.
இது குறித்து சவுதி எந்த பதிலும் தெரிவிக்கவில்லை. கோத்தபய தனது ஆட்சியின் போது இஸ்லாமியர்களுக்கு எதிரான வலுவான அணுகுமுறையைக் கடைப்பிடித்தார் என்பது தெளிவாகிறது. இறுதியாக இஸ்லாமிய நாடுகளே அடைக்கலம் கொடுக்க வேண்டியதாயிற்று என்ற எதிர்வினையும் வருகிறது.இதற்கிடையில், இலங்கையில் போராட்டம் தொடர்கிறது. போராட்டக்காரர்களை தடுக்க இலங்கை ராணுவம் நாடாளுமன்றம் அருகே டாங்கிகளை நிறுத்தியுள்ளது.