முதலுதவி பெட்டியில் இருக்கும் இந்தப் பொருள் துணி கறை முதல் வீட்டு கறை வரை போக்கும் தன்மைகொண்டது, அவற்றைப் பற்றி தெரிந்து கொள்வோம்.
வீடு பராமரிப்பு என்பது ஒரு வார்த்தையில் முடித்துவிட முடியாது. உரிய இடைவெளியில் எவ்வளவு சுத்தம் செய்து வந்தாலும் ஆங்காங்கே ஒளிந்திருக்கும் காரைகள் வெளிப்படும்போது வீட்டின் அழகு பாழாகிறது. வீட்டு பராமரிப்புக்கு என்று ஒவ்வொரு மாதமும் குளோரின் பவுடர் முதல் ஆசிட் வரை பல பொருட்களை நாம் வாங்கி வைத்தாலும், அது ஓரளவு மட்டுமே பலன் தருகிறது. அதுவும் சில நேரங்களில் சருமத்துக்கு அலர்ஜியை ஏற்படுத்தும். ஆனால் முதலுதவி பெட்டியில் இருக்கும் ஹைட்ரஜன் பெராக்ஸைடு கொண்டு கறைகளை எளிதாக போக்கமுடியும்.
வீட்டில் கண்டிப்பாக முதலுதவி பெட்டியில் இருக்கும் ஹைட்ரஜன் பெராக்ஸைடு அடிபடும் போது காயங்களால் உண்டாகும் புண்கள் போன்றவற்றை சுத்தம் செய்வதற்கு இவைதான் பயன்படுத்தப்படுகிறது. காயங்களில் படிந்திருக்கும் அழுக்குகளையும், கிருமிகளையும் நீக்கி புண்களை விரைவில் ஆற செய்யும். துணிகளில் ரத்தக்கறை, எண்ணெய் கறை, சாக்லேட் ஆல்கஹால் கறை போன்றவற்றை நீக்க ஹைட்ரஜன் பெராக்சைடு உபயோகமாக இருக்கும். இவை எளிதாக துணிகளில் பாதிப்பில்லாமல் கறைகளை நீக்கும். படுக்கை விரிப்புகள், திரைச்சீலைகள் என அனைத்தின் கரைகளையும் இதை கொண்டு நீக்க முடியும்.
ரத்தகறை இருக்கும் இடங்களில் நேரடியாக ஹைட்ரஜன் பெராக்ஸைடு ஊற்றி அந்த இடங்களைப் பிரஸ் கொண்டு தேய்க்கும் பொழுது கறை வேகமாக நீங்கிவிடும். மற்ற கரைகள் போக ஒரு பங்கு ஹைட்ரஜன் பெராக்சைடு பதிலாக இரண்டு பங்கு ஹைட்ரஜன் பெராக்சைடு மற்றும் நீர்விட்டு கறை இருக்கும் பகுதிகளில் பிரஸ் போட்டு தேய்த்தால் கறை எளிதில் நீங்கிவிடும். தரையில் படிந்திருக்கும் கறைகளை அகற்றுவது என்பது மிகப்பெரிய சவாலாக உள்ளது. குழந்தைகள் மற்றும் வயதானவர்கள் வீட்டில் சில பொருள்களை கொட்டும் போது அது கரையாக மாறிவிடுகின்றது.
மார்பிள், கிரானைட், டைல்ஸில் பதித்திருக்கும் தரையில் கறைகள் தனியாக தெரியும். கைவலிக்க எவ்வளவு வேகமாக சுத்தம் செய்தாலும் அதில் கறை போகாது, எனவே இவற்றை சுத்தம் செய்வதற்கு 3 மணி நேரத்திற்கு முன்பாக பாத்திரம் தேய்க்க பயன்படுத்தப்படும் பவுடரும் ஹைட்ரஜன் பெராக்சைடு கலந்து பேஸ்ட் போல் குழைத்து அந்த இடத்தில் தடவி விடவும். பிறகு சுத்தம் செய்யும்போது கிளீனிங் பவுடரோடு தேய்த்தால் கரையும் நீங்கிவிடும். நாள்பட்ட கறை என்றால் இரண்டு அல்லது மூன்று முறை கிளீன் செய்யும் போது கறை முற்றிலும் அகன்றுவிடும்.
இது மட்டும் இல்லாமல் ஜன்னல் கம்பிகள், கதவு, கைப்பிடிகள், ஸ்விட்ச் போர்டு போன்றவற்றையும் சுத்தம் செய்யும். சமையலில் உள்ள பொருட்களை வைக்கும் அலமாரியை சுத்தம் செய்யவும், காய்கறி நறுக்கும் பலகை போன்றவற்றை சுத்தம் செய்வதற்கு ஹைட்ரஜன் பெராக்ஸைடு மிகுந்த உதவியாக உள்ளது. இதை வைத்து சுத்தம் செய்யும்போது கறை சென்று வீடு பளிச்சென்று மாறிவிடும்.
குறிப்பு:
ஹைட்ரஜன் பெராக்ஸைடு வீட்டு பராமரிப்பு தாராளமாக பயன்படுத்தலாம் . ஆனால் நேரடியாக கைகளில் ஊற்றி, முகத்துக்கு அருகில், கண்களில் படும்படி செய்ய வேண்டாம். சற்று கவனத்துடன் பயன்படுத்தினால் உங்கள் வீட்டில் உள்ள கறைகள் கட்டாயம் சென்றுவிடும்.