வரலாற்றில் முதல் முறையாக சிங்கப்பூர் பாராளுமன்ற எதிர்க்கட்சி தலைவராக இந்திய வம்சாவளி வழக்கறிஞரான பிரீத்தம் சிங் நியமிக்கப்பட்டுள்ளார்
தென்கிழக்கு ஆசிய நாடான சிங்கப்பூரில் ஜூலை 10-ல் நடந்த பாராளுமன்ற தேர்தலில், பிரதமர் லீ செய்ன் லூங் தலைமையில் பி.ஏ.பி., எனப்படும் மக்கள் செயல் கட்சி, 83 இடங்களில் வெற்றி அடைந்து, நேற்று முன்தினம் ஆட்சி அமைத்துக் கொண்டது. இந்த தேர்தலில் இந்திய வம்சாவளியை சேர்ந்த வழக்கறிஞருமான பிரீத்தம் சிங்(43) பொதுச் செயலராக இருந்த தொழிலாளர் கட்சி 10 இடங்களை கைப்பற்றி பிரதான எதிர்க்கட்சியாக மாறியுள்ளது.
இதனைத் தொடர்ந்து, சிங்கப்பூர் பாராளுமன்ற எதிர்க்கட்சி தலைவராக பிரீத்தம் சிங் நேற்று நியமிக்கப்பட்டுள்ளார்.சிங்கப்பூர் பாராளுமன்ற வரலாற்றில் எதிர்க்கட்சி தலைவரை முறையாக நியமனம் செய்வது, இதுவே முதல் தடவை ஆகும். ஏனென்றால், அந்நாட்டின் அரசியலமைப்பு மற்றும் பாராளுமன்ற விவகாரங்கள் பற்றிய வழிகாட்டுதல்களில், எதிர்கட்சி தலைவர் நியமனம் குறித்த நிலைப்பாடு ஏதும் இல்லை.
இதனால் நாட்டின் அரசியலமைப்பில் திருத்தம் செய்து எதிர்க்கட்சி தலைவர் பதவி உருவாக்கப்படும். மக்களுக்கான திட்டங்களை உருவாக்குவதில் எதிர்க்கட்சி தலைவரின் பங்களிப்பு முக்கியமானது. இந்த பொறுப்பில், பிரீத்தம் சிங் நியமிக்கப்படுவார் என பிரதமர் லீ தெரிவித்திருந்தார். இதனையடுத்து, தெரிவித்த அறிக்கையில், ” அவர் எதிர்க்கட்சி தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார். அரசின் கொள்கைகள், செயல்பாடுகள், பாராளுமன்றத்தில் தாக்கல் செய்யப்படும் மசோதாக்கள் தொடர்பான விவாதங்களில் மாற்றுக் கருத்துகள் இருப்பின் அவற்றை முன் வைப்பதில் பிரீத்தம் சிங் எதிர்க்கட்சியை வழிநடத்துவார்.
பாராளுமன்றத்தில் அரசின் முடிவுகள் மற்றும் நடவடிக்கைகள் தொடர்பான ஆய்வுகளில், அவர் தலைமை தாங்குவார். அத்துடன் பொதுக்கணக்கு குழு உள்ளிட்ட புதிய குழுக்களில் எதிர்க்கட்சி உறுப்பினர்களின் நியமனம் குறித்த ஆலோசனையிலும் அவர் பங்கேற்பார்” என்று சபாநாயகர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.