டெல்லியில் மின் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் இருப்பதாக டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதியுள்ளார்.
நாட்டின் தலைநகரான டெல்லியில் மின் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் இருப்பதாக கூறிய அம்மாநில முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் இதனை தடுப்பதற்கு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாக தெரிவித்தார். டெல்லிக்கு மின் வினியோகம் வழங்கும் நிறுவனங்களுக்கு தேவையான நிலக்கரி மற்றும் எரிவாயு கிடைப்பதில் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதால் இது போன்ற சூழ்நிலை உருவாகியுள்ளது. இது தொடர்பாக பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதி உள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
கடந்த ஆகஸ்ட் மாதம் முதலிலிருந்தே நிலக்கரி தட்டுப்பாடு நீடித்து வருவதாக பிரதமர் மோடிக்கு எழுதியுள்ள கடிதத்தில் குறிப்பிட்டுள்ளதாக அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். ஏற்கனவே அனல் மின் நிலையங்களுக்கு நிலக்கரி வேண்டுமென ஆந்திர முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதி இருந்த நிலையில், தற்போது டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலும் பிரதமருக்கு கடிதம் எழுதியுள்ளார்.