இளம்பெண் ஒருவர் சூப்பர் மார்க்கெட் ஒன்றில் எச்சிலை துப்பியுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் பரவி வருவதன் காரணமாக பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு வருகிறது. அதில் முகக் கவசம் அணிதல் என்பது அனைவருக்கும் முக்கியமான ஒன்றாகும். முக கவசம் அணிவதன் மூலம் கொரோனாவிலிருந்து தப்பிக்கலாம் என்று மருத்துவர்கள் பலரும் கூறி வருகின்றனர். உலக சுகாதார நிறுவனம் கூட முக கவசம் அணியுமாறு அடிக்கடி அறிவித்து வருகிறது. இந்நிலையில் பிரிட்டனின் தலைநகர் லண்டனில் சூப்பர் மார்க்கெட் ஒன்றிற்கு வந்திருந்த இளம்பெண் ஒருவர் தேவையான பொருட்களை வாங்கி விட்டு காசாளரிடம் பணத்தைக் கொடுக்க சென்றுள்ளார்.
அப்போது அவர் முகக் கவசம் அணியாமல் வந்துள்ளதை பார்த்த காசாளர், அப்பெண்ணிடம் பணத்திற்கான கார்டை வாங்க மறுத்துள்ளார். இதனால்கோபமடைந்த அந்தப் பெண் என்னுடைய கார்டில் பணம் இருக்கிறது பின்னர் ஏன் அதை வாங்க மறுக்கிறீர்கள்? என்று கூறியுள்ளார்.
ஆனால் காசாளர் முகக்கவசம் அணியாததால் வாங்க முடியாது என்று கூறியதும், கோபமடைந்த அப்பெண் அவரை திட்டி விட்டு எச்சிலை துப்பி உள்ளார். எச்சில் மூலம் எளிதாக ஒருவருக்கு கொரோனா பரவி வரும் நிலையில் அப்பெண் அப்படி செய்தது அங்கிருந்த வாடிக்கையாளர்கள் மற்றும் ஊழியர்கள் பலரையும் அதிர்ச்சி அடைய வைத்துள்ளது. மேலும் அப்பெண் கடையை விட்டு வெளியேறும் போது அங்கிருந்த கிறிஸ்துமஸ் மரங்களை எட்டி உதைத்து விட்டு சென்றுள்ளார். இந்த காட்சிகள் தற்போது சமூகவலைதளத்தில் வைரலாகி வருகிறது.