கேப்டன் முதல்வர் ஆகவேண்டும் என்ற நோக்கத்துடன் மட்டுமே தேதிமுக தொண்டர்கள் செயல்பட வேண்டும் என கேப்டனின் மூத்த மகன் விஜய பிரபாகரன் தெரிவித்துள்ளார்.
அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் நகர கழக செயலாளர் சின்னபாண்டு இல்ல புதுமனை புகுவிழா நடைபெற்றது. இதில் கலந்துகொள்ள வருகை புரிந்த கேப்டனின் மூத்த மகன் விஜய பிரபாகரனுக்கு வழிநெடுகிலும் தேமுதிக தொண்டர்கள் பட்டாசு வெடித்து உற்சாக வரவேற்பு அளித்தனர்.
முன்னதாக உடையார்பாளையம் பேரூராட்சி அருகே கழக கொடியை ஏற்றி வைத்து சிறப்பித்தார்.அதனைத் தொடர்ந்து தொண்டர்கள் புடைசூழ கார் மூலம் விழா நடைபெறும் பகுதிக்கு சென்றடைந்த விஜயபிரபாகரன் சின்னபாண்டு இல்லத்தை ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார்.
தொடர்ந்து நிகழ்ச்சியில் பேசிய விஜயபிரபாகரன் கட்சிக்குள் வருவதற்கு காரணம் எனது தந்தை என்றும், அவர் செய்தது போல் நானும் பொதுமக்களுக்கு சேவை செய்ய வேண்டும் என்ற ஒரே நோக்கத்தில் இருப்பதாகவும் கூறினார்.
விஜயபிரபாகரன் யார் என்பதை இந்த உலகிற்கு விரைவில் காண்பிக்க உள்ளதாகவும், தேமுதிகவை பொருத்தவரை கேப்டன் முதல்வராக வேண்டும் என்ற நோக்கத்துடன் மட்டுமே கட்சியினர் செயல்பட வேண்டும் என்று குறிப்பிட்டார்.