மே2-ஆம் தேதி தமிழக சட்டமன்ற தேர்தல் வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் வெளியிடப்பட்டது. இதில் திமுக பெரும்பான்மை இடங்களை கைப்பற்றி தமிழகத்தில் 10 ஆண்டுகளுக்கு பிறகு ஆட்சி அமைக்கிறது. இதையடுத்து மே 7-ஆம் தேதி மு.க ஸ்டாலின் முதலமைச்சராக ஆளுநர் மாளிகையில் எளிமையான முறையில் பொறுப்பேற்க இருக்கிறார். இந்நிலையில் நேற்று சென்னை அண்ணா அறிவாலயத்தில் மு .க ஸ்டாலின் தலைமையில் திமுக எம்எல்ஏக்கள் கூட்டம் தொடங்கியது.
துரைமுருகன், பொன்முடி உள்ளிட்ட 133 எம்எல்ஏக்கள் கூட்டத்தில் பங்கேற்றனர். திமுக எம்எல்ஏக்கள் 125 பேருடன் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட்டு வென்ற 8 பேரும் கூட்டத்தில் பங்கேற்றனர்.இதையடுத்து முறைப்படி திமுக சட்டமன்ற கட்சி தலைவராக மு.க ஸ்டாலின் தேர்ந்தெடுக்கப்பட்டார். இந்நிலையில் ஆளுநர் பன்வாரிலால் புரோகித்தை சந்தித்து ஆட்சி அமைக்க ஸ்டாலின் உரிமை கோரினார்.
எம்எல்ஏக்களின் ஆதரவு கடிதம், அமைச்சரவைப் பட்டியலை ஆளுநரிடம் அளித்தார். இதனை தொடர்ந்து ஆளுநர் தமிழகத்தில் ஆட்சியமைக்க ஸ்டாலினுக்கு முறைப்படி அழைப்பு விடுத்தார். இந்நிலையில் நாளை மறுநாள் காலை 9 மணியளவில் ஆளுநர் மாளிகையில் எளிமையான முறையில் ஸ்டாலின் முதலமைச்சராக பதவியேற்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதையடுத்து முதலமைச்சராக பொறுப்பேற்றதும் நாளை மறுநாள் மாவட்ட ஆட்சியர்களுடன் கொரோனா தடுப்பு நடவடிக்கை குறித்த மு.க. ஸ்டாலின் ஆலோசனை நடத்த உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.