தமிழகத்தில் கொரோனா இரண்டாவது அலையின் தாக்கம் படிப்படியாக குறைந்ததையடுத்து கடைகள், தியேட்டர்கள், டாஸ்மாக் கடைகளை திறக்க தமிழக அரசு அனுமதி அளித்தது. இதனால் சில மாதங்களாக அனைத்தும் செயல்பட்டு வருகிறது. மேலும் பள்ளிகள் திறக்கப்பட்டு வகுப்புகள் நடைபெற்று வருகிறது. ஆனால் கோயில்களில் வார இறுதி நாட்களான வெள்ளி, சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் மட்டும் பொதுமக்கள் வழிபட தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் வார இறுதி நாட்களிலும் கோயில்களை திறக்க வேண்டும் என்று தமிழக பாஜக சார்பாக மாநிலம் முழுவதும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
அப்போது செய்தியாளர்களை சந்தித்து பேசிய அண்ணாமலை, கோயில்களில் உள்ள அறங்காவலர்கள் தான் கோயில் சம்பந்தபட்ட முடிவு எடுக்க வேண்டும் என்று இந்து அறநிலையத்துறை சட்டம் சொல்கிறது. ஆனால் அதற்கு மாறாக முதல்வர் ஸ்டாலினுக்கு அந்த அதிகாரம் கிடையாது. இதனை நாங்கள் முறையாக தமிழக அரசிடம் தெரிவித்துள்ளோம். கோயில் திறப்பு விஷயத்தில் தமிழகஅரசு செய்வது சட்டத்திற்கு எதிரானது மட்டுமல்ல, தர்மத்துக்கும் எதிரானது. இந்த நடவடிக்கைக்கு எதிராக தமிழக பாஜக சட்டரீதியான நடவடிக்கை மேற்கொள்ள உள்ளது என்று கூறியுள்ளார்.