தேர்தல் வாக்குறுதி பொய்யாகி விட்டதாக மன்னார்குடி பிஆர் பாண்டியன் பரபரப்பு பேட்டி அளித்துள்ளார்.
தமிழகத்தில் திமுக ஆட்சிக்கு வந்தால் ஒரு குவிண்டால் நெல்லுக்கு 2,500 ரூபாயும், கரும்புக்கு ரூபாய் 4 ஆயிரம் வழங்குவோம் என்று தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் அறிவித்திருந்தார். தற்போது இரண்டு பட்ஜெட் நிறைவடைந்துள்ள நிலையில் இதுகுறித்து எந்த பதிலும் தெரிவிக்காதது விவசாயிகளிடையே பெரும் ஏமாற்றத்தை அளிக்கின்றது. இதனால் தேர்தல் வாக்குறுதி பொய்த்து விட்டதா என்று மன்னார்குடி பிஆர் பாண்டியன் கேள்வி எழுப்பியுள்ளார். இது தொடர்பாக அவர் தெரிவித்துள்ளதாவது: “தமிழக அரசு நேற்று 2022 – 23 ஆம் ஆண்டுக்கான பட்ஜெட்டை தாக்கல் செய்தது. இந்த பட்ஜெட் இயற்கை விவசாயம், மருத்துவ குணம் கொண்ட உணவுப் பொருட்களை உற்பத்தி செய்வதற்கும் அதை சந்தைப்படுத்துவதற்கான பல அடிப்படை கட்டமைப்புகளை கொண்ட அறிவியல் பார்வையுடன் ஒரு பன்முக தன்மை கொண்டதாக இருந்தது.
இதனை தமிழக விவசாயிகள் வரவேற்கின்றோம். அதேசமயம் விலை உத்தரவாதம் இல்லாமல் இந்த பட்ஜெட் தாக்கல் செய்திருப்பதால் இதன் நோக்கம் வெற்றி பெறுமா என்கின்ற சந்தேகம் எழுகின்றது. குறிப்பாக உழவர் சந்தைகளை கூடுதல் ஆக்குவதற்கும், மேம்படுத்துவதற்கான பல்வேறு திட்டங்கள் விசிடி சேனல் ஏற்கனவே கைவிட்ட நிலையில் நேற்றைக்கு மீண்டும் அதற்கான நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. ஒவ்வொரு வேளாண் உற்பத்திபொருட்கள் சார்ந்த, சந்தை மண்ணுக்கேற்ற பயிர் வகைகள் பயிர் வாரி முறைகளை அமல்படுத்தும் விதமாக, இதற்கான ஆய்வு மண்டலங்கள் விற்பனை சந்தைகள், எந்த பகுதிகளில் எந்த காய்கறிகளை விளைவிக்க முடியும், எந்த பகுதிகளில் எண்ணெய் வித்துகள் விளைவிக்க முடியும் என்பதை ஆய்வு செய்து அதற்கான அடிப்படையில் பல்வேறு சிறப்பு திட்டங்களை உருவாக்கிய ஒரு தொலைநோக்கு பார்வை கொண்ட பட்ஜெட் இது.
ஆனால் நெல்லுக்கு 2,500 ரூபாயும், கரும்புக்கு ரூபாய் 4 ஆயிரமும் நாங்கள் வழங்குவோம் என்று தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் வாக்குறுதி அளித்திருந்தார். தற்போது இரண்டு வருடங்கள் நிறைவடைந்த நிலையில் இது தொடர்பாக எந்த ஒரு அறிவிப்பும் வெளியாகவில்லை. இது விவசாயிகளுக்கு மிகுந்த ஏமாற்றத்தை அளிக்கின்றது. தற்போது அறிவிக்கப்பட்ட பட்ஜெட் வரவேற்கக் கூடியதாக இருந்தாலும் விலை உத்தரவாதம் இல்லாமல் இருப்பது விவசாயிகளுக்கு பயன் தருமா? என்ற ஏக்கத்தோடு இந்த பட்ஜெட்டை வரவேற்கிறோம்” என அவர் தெரிவித்தார்.