தமிழக முதல்வராக மு க ஸ்டாலின் பொறுப்பேற்றதையடுத்து முதல்வரின் தனிப்பிரிவு மனுக்கள் மீது தனி அக்கறை காட்டி வருகிறார். இந்த புகார் மனுக்களை உடனடியாக விசாரித்து அதற்கு தீர்வு உடனடியாக வழங்கப்படுகிறது. இதனால் நாள்தோறும் ஆயிரக்கணக்கான மக்கள் புகார் மனு அளித்து வருகின்றனர். இந்த அலுவலகம் சென்னை தலைமைச் செயலகத்தில் செயல்பட்டு வருகிறது. சென்னை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்து ஆயிரக்கணக்கான மக்கள் நீண்ட வரிசையில் நின்று முதல்வரின் தனிப்பிரிவில் மனுக்களை அளித்து வருகின்றனர்.
இவ்வாறு முதியவர்கள், கர்ப்பிணிப் பெண்கள் என பலரும் முக கவசம் அணியாமலும், போதிய இடைவெளியை கடைபிடிக்காமலும் இருப்பதால் கொரோனா பரவும் அபாயம் உள்ளது. எனவே இதை தடுப்பதற்காக தடுப்பு வழிகாட்டு நெறிமுறைகளை கடைபிடிக்கும் வகையில் முதல்வரின் தனி பிரிவிற்கு பொதுமக்கள் இணையதளம் வாயிலாக மனுக்களை அளித்து பயன்பெறலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் பொதுமக்களிடமிருந்து நேரடியாகவோ அல்லது தபால் மூலமாகவோ அல்லது இணையதளம் மூலமாகவோ எந்த வகையில் மனுக்கள் பெறப்பட்டாலும் ஒரே மாதிரியான நடவடிக்கை எடுக்கப்படும் என்று தமிழக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.