தமிழக சட்டமன்ற தேர்தலுக்கு இன்னும் ஐந்து மாதங்கள் இருக்கும் நிலையில் ஆளும் கட்சி – எதிர்க்கட்சி இடையே தேர்தல் பிரச்சாரம் சூடுபிடித்துள்ளது. ஆளும் கட்சியான அதிமுக மூன்றாவது முறையாக தொடர்ந்து ஆட்சி கட்டலை அலங்கரிக்க வேண்டும் என்று பல்வேறு வியூகங்களை வகுத்து வருகின்றது. சற்றுமுன் கூட பொங்கலுக்கு 2500 ரூபாய் வழங்கப்படும் என்ற அறிவிப்பை அதிமுக வெளியிட்டு இருந்தது.
இதனிடையே கூட்டணி தொடர்பான பேச்சுக்கள் சில மாதங்களாக நடந்து வந்த நிலையில் அதிமுக கூட்டணியில் உள்ள பாஜக புதுக் குண்டை தூக்கி போட்டுள்ளது. பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில் இடம்பெற்றுள்ள அதிமுக தமிழகத்தை பொறுத்தவரை தலைமை தாங்கும் கட்சியாக இருக்கும் நிலையில் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி முதல்வர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார்.
இந்த நிலையில் பாரதிய ஜனதா கட்சியின் மாநில தலைவர் எல். முருகன் அரியலூரில் பேசும் போது, தமிழக சட்டமன்ற தேர்தலில் முதல்வர் வேட்பாளர் யார் என்பதை பாஜக தலைமை விரைவில் அறிவிக்கும் எனவும் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் முதலமைச்சர் வேட்பாளரை அதிமுக முடிவு செய்தாலும் அதை பாஜகதான் அறிவிக்கும் என்றும் பாஜக மாநில தலைவர் எல். முருகன் குறிப்பிட்டிருக்கிறார். தமிழகத்தில் தேர்தல் யாருடைய தலைமையில் சந்திப்பது என்பதையும் தேசிய தலைமை முடிவு செய்யும். தமிழத்தில் தற்போதுள்ள கூட்டணியில் பாஜக உள்ளது எனவும் அரியலூரில் எல்.முருகன் தெரிவித்துள்ளார்.