தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் அளித்த தகவலால் ஒட்டுமொத்த செவிலியர்களும் மிகுந்த மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
விருதுநகரில் மத்திய அரசு 60 சதவீதம் பங்களிப்பு, மாநில அரசு 40% பங்களிப்புடன் 390 கோடி மதிப்பில் புதிதாக கட்டப்பட்டுள்ள மருத்துவ கல்லூரியை மாவட்ட ஆட்சியர் முன்னிலையில் தொழில் துறை அமைச்சர் தங்கம் தென்னரசு, வருவாய் துறை அமைச்சர் ராமச்சந்திரன் மற்றும் மருத்துவ மற்றும் மக்கள் நல்வாழ்வு துறை அமைச்சர் சுப்பிரமணியம் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டனர். இந்த ஆய்வில் புதிய மருத்துவக் கல்லூரியில் கட்டப்பட்டுள்ள கட்டிடங்கள் உடற்கூறு ஆய்வகம் ஆகியவற்றைப் பார்வையிட்டனர் .
இதன் பின்னர் செய்தியாளர்களை சந்தித்த மா சுப்பிரமணியன் தெரிவித்துள்ளதாவது: “இந்தியாவிலேயே 69 தனியார் மற்றும் அரசு மருத்துவக் கல்லூரிகள் உள்ள ஒரே மாநிலம் தமிழகம் தான். 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மருத்துவ மாணவர்கள் படிக்கும் அளவுக்கு கட்டமைப்பு உள்ளது. இந்தியாவில் 8 மருத்துவர்களில் கண்டிப்பாக ஒரு தமிழக மருத்துவர் இருப்பார். இதற்கான அடித்தளத்தை மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதி 2006ஆம் ஆண்டு அமைத்தார். ஒமைக்ரான் வைரஸ் பாதுகாப்பு நடவடிக்கையாக ஏற்கனவே தமிழக முதல்வர் உத்தரவின் பெயரில் பன்னாட்டு விமான நிலையங்களில் கூடுதல் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது.
தமிழகம் முழுவதும் தொற்று பரவாமல் இருப்பதற்கு தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றது. பேரிடர் காலத்தில் தற்காலிகமாக பணியாற்றிய பணியாளர்களை பணி நீக்கம் செய்யாமல் முதல்வரின் உத்தரவுக்கு இணங்க அவர்களுக்கு பணி நீட்டிப்பு செய்யவும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது” என்று தெரிவித்தார். இதனால் செவிலியர்கள் அனைவரும் மிகுந்த மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.